மும்பை: இந்தியாவில் மிகப் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றான ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் பிரேசில் கரும்பு ஆலையை வாங்கியுள்ளது.
பிரேசிலில் உள்ள மிகப் பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்று, ‘எக்யுபே எஸ்ஏ’. இந்த கரும்பு ஆலையை 1,530 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது ரேணுகா சுகர்ஸ் நிறுவனம்.
இந்த ஆலை ஆண்டுக்கு ஒரு கோடி டன் கரும்பை அரவை செய்யும் திறன் கொண்டது. சர்வதேச அளவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இப்புதிய உத்தியை ரேணுகா சுகர்ஸ் கையாண்டுள்ளது.
ஏற்கெனவே எத்தனால் உற்பத்தி செய்யும் வாலே டோ இவாய் அக்யூகார் எனும் நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பரில் ரூ. 1,110 கோடிக்கு ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ரேணுகா சுகர்ஸ் நிறுவனம் தனது பங்குகளை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம் ரூ. 500 கோடியை திரட்டியது. இந்நிறுவனத்தை உருவாக்கிய குழுமத்தினர் ரூ. 185 கோடிக்கான வாரன்ட்டுகளை விற்பனை செய்ததன் மூலம் திரட்டிய தொகையும் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்.
Leave a Reply