பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தே.மு.தி.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை கட்சித்தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார்.
இது குறித்து, தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2010 மார்ச் மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ள பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க.சார்பில், கட்சியின் மாவட்ட பொருளாளரும், வழக்கறிஞருமான கே.ஜி.காவேரிவர்மன் அறிவிக்கப்படுகிறார்.
கட்சித்தோழர்கள் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றி தே.மு.தி.க.வேட்பாளர் வெற்றிபெற முழுமூச்சுடன் பாடுபடக்கேட்டுக்கொள்கிறேன்.
அரசியலில் நேர்மையும், தூய்மையும் நிலவுவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள தே.மு.தி.க.வுக்கு வாக்காளர்களும் பேராதரவு அளித்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.
பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள கே.ஜி.காவேரிவர்மனுக்கு வயது 45. தர்மபுரி மாவட்ட பொருளாளரான இவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் பென்னாகரம் அருகே உள்ள திருமல்வாடி கிராமம் ஆகும். இவரது தந்தை பெயர் கோவிந்தன். தாயார் காளியம்மாள்.
தே.மு.தி.க. தொடங்கப்பட்டபோது இவர் அந்த கட்சியின் வக்கீல் அணி செயலாளராக இருந்தார். தற்போது அவர் மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். தே.மு.தி.க. தொடங்கப்படுவதற்கு முன்பு இவர் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
கே.ஜி.காவேரிவர்மனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கார்த்தி வர்மன் என்ற மகனும், ஹேமலதா, மேகலா என்ற மகள்களும் உள்ளனர்.
Leave a Reply