சென்னை : ஒரு வழியாக பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27ம் தேதி தேர்தலும், 30ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்துவிட்டன. பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ., பெரியண்ணன் கடந்த டிசம்பர் 1ம் தேதியன்று இறந்ததை தொடர்ந்து, இத்தொகுதிக்கான உறுப்பினர் பதவி காலியானது. அப்போது, திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தல் முடிந்ததும், பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 20ம் தேதி தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இதற்கான மனு தாக்கலும் டிசம்பர் 26ம் தேதி துவங்கியது. தி.மு.க., மற்றும் பா.ம.க., கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் ஈடுபடத் துவங்கி விட்டன. இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் சட்டசபை கூட்டத் தொடர் நடந்ததால், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென, பா.ம.க., – அ.தி.மு.க., மற்றும் இதர கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை தேர்தல் கமிஷன் நடத்தியது. இதில், தி.மு.க., – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டும், இடைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டுமென வலியுறுத்தின; மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், இடைத்தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் ரத்து செய்வதாக டிசம்பர் 28ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் பின், இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி துவங்கியது. அப்போது, வாக்காளர் பட்டியலில் ஏராளமான பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், புதிதாக பெயர்களை அதிகளவில் சேர்க்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நேரடியாக தேர்தல் கமிஷனிடமே சென்று மனு கொடுத்தன. இதனால், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பிப்ரவரி 1ம் தேதி வெளியிட இருந்த நிலையில், பட்டியல் வெளியிடுவதை தேர்தல் கமிஷன் தள்ளி வைத்தது. இதனால், அ.தி.மு.க.,வின் சொல்படி தேர்தல் கமிஷன் நடப்பதாக, தி.மு.க., மற்றும் பா.ம.க., குற்றம் சாட்டின.
மார்ச் 1ம் தேதியில் இருந்து பிளஸ் 2 தேர்வுகளும், அதைத் தொடர்ந்து இதர வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளும் நடக்க உள்ளதாலும், மார்ச் கடைசி வாரத்தில் இருந்து சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதாலும், இடைத்தேர்தலை மே மாதத்துக்கு முன்பாக நடத்த வாய்ப்பில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெறப்பட்டது. இதில், புதிதாக விண்ணப்பித்திருந்த 32 ஆயிரம் பேரில், 19 ஆயிரத்து 500 பேரை புதிதாக பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. மற்ற விண்ணப் பங்கள் நிராகரிக்கப் பட்டன. பென்னாகரம் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து, பென்னாகரம் தொகுதி அடங்கிய தர்மபுரி மாவட்டம் முழுமைக்கும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்துவிட்டன.
Leave a Reply