கோலாலம்பூர், பிப். 11: சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
இது குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச சகோதரரும், பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபட்ச கூறியதாக மலேசியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. எனவே, அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவர் மீதான ராணுவ விசாரணை விரைவில் தொடங்கும். அவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ராணுவத்தில் பிளவை உண்டாக்க முயன்றார். ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயன்றார்.
தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இலங்கையில் ராணுவ ஆட்சி கொண்டு வர சதித் திட்டம் தீட்டினார்.
2009 ஜனவரியில் பத்திரிகையாளர் லசந்தா விக்ரமதுங்கே கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் பொன்சேகா மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்.
லசந்தா விக்ரமதுங்கே கொல்லப்பட்டது தொடர்பாக உண்மை விரைவில் வெளிவரும்.
அமெரிக்கா, நார்வே மீது குற்றச்சாட்டு: அதிபர் தேர்தலில் பொன்சேகா பிரசாரத்துக்கு சில மேற்கத்திய நாடுகள் உதவி செய்துள்ளன. அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள் ஏராளமாக பணம் செலவழித்துள்ளன.
இலங்கை அரசுக்கு எதிராக எழுத பத்திரிகையாளர்களுக்கு நார்வே அரசு பணம் கொடுத்துள்ளது என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றார்.
பொன்சேகாவுக்கு அமைச்சர் கண்டனம்: போர் சமயத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மைகளை வெளியிடுவேன் என பொன்சேகா கூறியதற்கு செய்தித் துறை அமைச்சர் லட்சுமண் யப அபேயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போர் சமயத்தில் நடந்தவை தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூறுவேன் என ஒருவர் கூறினால், அதுபோன்ற ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்த ராணுவத்துக்கு உரிமை உண்டு என்றார் அவர்.
பொன்சேகா இதுபோன்று பேசுவது துரோகமாகும் என ஆளும் கூட்டணியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சா கூறினார்.
மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவரது மனைவி அனோமா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை அரசு அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றால் உண்மைகள் வெளிவரக் கூடும் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
Leave a Reply