மும்பை: பொருளாதார மந்தத்தால் கடந்த ஓர் ஆண்டாக வீழ்ச்சியடைந்திருந்த ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை (ஏ.ஆர்.ஆர்.,), இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2008 மற்றும் 2009ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தத்தால், ஓட்டல் அறை வாடகைக் கடும் வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக 2008 அக்டோபர் முதல் செப்டம்பர் 2009 வரையிலான காலகட்டத்தில் ஓட்டல் அறை வாடகை நாடு முழுவதும் 30 லிருந்து 40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. அதையடுத்து, பொருளாதார மந்தம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கியதிலிருந்து அறை வாடகை சூடுபிடித்துள்ளது. 2009, டிசம்பரிலிருந்து அது ஏறுமுகமாகவே இருக்கிறது.
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா மற்றும் கோவா போன்ற இடங்களில் டிசம்பரில் ஏ.ஆர்.ஆர்., எட்டாயிரத்து 169 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 42 சதவீதம் அதிகம். கடந்த டிசம்பரில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் கணிசமான இந்தியர்கள் நாடு திரும்பி சுற்றுலா விசாவில் இங்குத் தங்கியதால் ஓட்டல் அறைகள் நிரம்பி வழிய ஆரம்பித்தன. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரின் வருகையும் அதிகரித்திருப்பதால், 2010 மார்ச் காலாண்டில் ஏ.ஆர்.ஆர்.,60 லிருந்து 70 சதவீதமாக உயர வாய்ப்பிருக்கிறது. இதனால் வாடகை, 12 சதவீதம் அதிகரித்து ஒன்பதாயிரத்து 200 ரூபாய் வரை உயரக் கூடும். வெளிநாட்டினர் வரவு அதிகரித்திருப்பதால், டில்லி போன்ற பெருநகரங்களில் ஓட்டல் அறைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டில்லியில் மட்டும் எட்டாயிரம் அறைகள் தேவைப்படுகின்றன. நாடு முழுவதும், செயல்படுத்தப்பட்டு வரும் 415 திட்டங்களின் கீழ், 68 ஆயிரத்து 480 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை பெங்களூரு, புனே, மும் பை, சென்னை மற்றும் டில்லியில் அமையும்.
Leave a Reply