மதுரை :மதுரை காமராஜ் பல்கலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான பணி நியமன பட்டியலை, கோர்ட் இறுதி முடிவுக்கு பின் வெளியிட வேண்டும் என ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
மதுரை மத்திய, மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் நல சங்க நிர்வாக அறங்காவலர் ராஜேந்திரசோழன் தாக்கல் செய்த பொது நல வழக்கு:மதுரை காமராஜ் பல்கலையில், 1998க்கு பின் ஏற்பட்ட எஸ்.சி., எஸ்.டி., காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல்கலையில் ஆசிரியர் பணியிடங்களில், பொது பிரிவில் 93 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 114 பேர் நியமிக்கப்பட்டனர். பிற்பட்டோர் பிரிவில் 151 பணியிடங்களுக்கு பதிலாக, 175 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 57க்கு பதிலாக, 17 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், 40 பணியிடங்கள் குறைவாக நியமிக்கப்பட்டன. இப்பல்கலையில் எஸ்.சி., எஸ்.டி., பணியிடங்கள் 103 காலியாக இருப்பதாக தாழ்த்தப்பட்டோர் நல செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதில் 32 ஆசிரியர் பணியிடங்கள், 71 ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் அடங்கும். 2002ல் நடந்த செனட் கூட்டத்தில் 103 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட், எஸ்.சி., எஸ்.டி., பணியிடங்களுக்கு தனியாக விளம்பரம் செய்து நிரப்பவும், மற்ற பணியிடங்களை இனச்சூழற்சி முறையில் நிரப்பவும் உத்தரவிட்டது. தற்போது 2010 ஜன., 22ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 32, பிற்படுத்தப்பட்டோர் 27 பணியிடங்களை நிரப்ப பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு வெளியானது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், தாழைமுத்தரசு ஆஜராயினர். பல்கலை சார்பில் வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜரானார்.
நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பணியை பல்கலை தொடரலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பணிநியமன தேர்வு பட்டியலை கோர்ட் இறுதி முடிவுக்கு, பின் பல்கலை வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டது.
Leave a Reply