மத்திய பட்ஜெட் பற்றி அதிமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், சமக, தேமுதிக போன்ற தமிழக கட்சித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் விபரம் வருமாறு:
ஜெயலலிதா (அதிமுக):
விவசாயத் துறையை கைதூக்கி விடும் வகையில் சில நடவடிக்கைகள் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன. உரத்தின் மீதான மானியத்தை குறைத்து விட்டனர். திருப்பூரில் மாசு பிரச்னை தீர்க்க ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அம்சங்களை நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். நேரடி வருவாய் மற்றும் வருமான வரி சலுகை அறிவித்திருப்பது நடுத்தர மக்களுக்கு ஓரளவு பயன் தரும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளார். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டில் நல்ல நோக்கங்கள் இருப்பதுபோல காணப்பட்டாலும் குறைந்த பயன்களையே அளிப்பதாக உள்ளது.
தங்கபாலு (காங்கிரஸ்):
எதிர்கால வளர்ச்சிக்கு வலுவூட்டுவதாகவும், மக்களின் மேம்பாட்டை உயர்த்துவதாகவும் அமைந்துள்ளது. அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்டங்களும், நிதி ஆதாரங்களும் ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ளது. 2வது பசுமைப் புரட்சி, விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு திருப்புமுனையாக இருக்கும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):
ஏழை, நடுத்தர மக்கள் மீது புதிய சுமைகளை சுமத்தியுள்ளது. தாராளமயக் கொள்கை மற்றும் உலகப் பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரத்தை இணைப்பதாக பட்ஜெட் உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு எந்த தீர்வையும் பட்ஜெட் அளிக்கவில்லை.
வைகோ (மதிமுக):
விலை ஏற்றத்தை தடுக்க திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி உயர்வால் விலைவாசி மேலும் உயரும். வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லை. சில்லரை விற்பனையில் தாராளமயத்தை அனுமதிப்பது தொழிலாளர்களை பாதிக்கும். வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் இல்லை.
விஜயகாந்த் (தேமுதிக):
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஏமாற்றத்தை தருகிறது. மக்கள் மீது அக்கறை இருந்தால் பெட்ரோல் மீதான வரிகளை குறைக்கலாம். உரத்தின் விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகளை பல வழிகளில் பாதிக்கும். சுவீஸ் வங்கியில் உள்ள ரூ.75 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சரியான எந்த அறிவிப்பும் இல்லை.
சரத்குமார் (சமக):
கிராம வளர்ச்சிக்கு கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
ஊரக வேலைவாய்ப்பு, சாலைகள் மேம்பாடு, சமூகநலம், மருத்துவக் காப்பீடு, ஆரம்ப கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பது, உள்நாட்டு சில்லரை வர்த்தகர்களை பாதிக்கும்.
இவ்வாறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply