அழகு தமிழ்… காதில் தேனாய் பாயும் “அம்மா’ என்ற வார்த்தை. “வணக்கம்’ என்று சொல்லத் தெரிந்திருந்தாலும், சரளமாக ஆங்கிலம் பேசும் பலர் “வண்க்கம்’ என்றே சொல்கின்றனர்.
பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்று தருவதில் முனைப்பு காட்டுகின்றனர்; பெற்றோரும் விரும்புகின்றனர். தாய் மொழி தமிழின் சிறப்பை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் பணியை, சில பள்ளிகள் தான் செய்து முடிக்கின்றன. ஊட்டியிலிருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள தூனேரி அகலாரில் செயல்படும் “குருகுலம்’ பள்ளியும் ஒன்று.
பள்ளியில் ஆங்கிலத்தை கற்றுக் கொடுத்தாலும், வாரத்தில் தமிழில் பட்டி மன்றம், பேச்சுப் போட்டிகளை நடத்தி உற்சாகப்படுத்துகின்றனர். முத்தாய்ப்பாக, இரு நாட்களுக்கு முன் “தமிழ் இலக்கிய மன்ற விழா’ நடந்தது. “மாணவனை பண்பாளனாக மாற்றுவது ஆசிரியர்களே; பெற்றோரே?, என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஒத்திகை பார்த்தார்களோ; என்னவோ தெரியவில்லை; மாணவ, மாணவியரின் பேச்சில் “அனல்’ பறந்தது. தமிழையும், தமிழுக்கு இலக்கணம் கொடுத்த பாரதியையும் நினைவு கூறும் வண்ணம், 87 மாணவ, மாணவியர் பாரதியின் அலங்காரத்தில் வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
“நிற்பதுவே நடப்பதுவே’, “அச்சமில்லை அச்சமில்லை’, “வெள்ளிப் பனி மீதுலாவுவோம்’, “ஒளி படைத்த கண்ணினாய்’, “செந்தமிழ் நாடென்னும் போதினிலே’. காக்கை சிறகினிலே நந்தலாலா’ உட்பட பாரதியின் பாடல்களை, அச்சப்படாமல் மேடையில் பாடி, கரகோஷத்தையும் உரித்தாக்கி கொண்டனர். பாடல் பாடி முடிந்த பின் “நன்றி’ எனக் கூறி, தமிழ் பற்றை வெளிப்படுத்தினர். குழந்தைகளை புதுவித அலங்காரத்தில் பார்த்த பெற்றோருக்கும் குஷி.
பள்ளி தாளாளர் அர்ஜுனன் கூறுகையில், “”மாணவர்களின் நுனி நாக்கில் ஆங்கிலம் அதிகம் வந்தாலும், தமிழை மறக்கக் கூடாது என்பது தான் பள்ளி நிர்வாகத்தின் நோக்கம். ஒவ்வொரு வாரத்திலும், “தமிழ்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தி, தமிழுக்கு சிறப்பு சேர்த்தவர்களை பற்றி நினைவு படுத்தி வைக்கிறோம். மாணவர்களும் சிறப்பாக பேசி, திறமையை வெளிப்படுத்துகின்றனர்,” என்றார். நிகழ்ச்சியில் தெளிவாக தெரிந்தது ஒன்று… “முதலில் தமிழ்; பிறகு தான் மற்றதெல்லாம்’.
Leave a Reply