கோல்கட்டா:””மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தினால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது,” என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நக்சல்களால் பாதிக்கப் பட்ட மாநிலங்களான ஜார்க்கண்ட், ஒரிசா, பீகார் மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம், மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில் உள்ள அரசுத் தலைமைச் செயலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி அமைச்சரவைக் கூட்டம் இருப்பதால், தனக்குப் பதிலாக உள்துறைச் செயலர் ஆமீர் சுகானி மற்றும் டி.வி.பி., ஆனந்த் சங்கர் இருவரையும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அனுப்பி வைத்திருந்தார்.உடல்நிலையைக் காரணம் காட்டி வராத ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சிபுசோரன், தனக்குப் பதிலாக துணை முதல்வர்கள் ரகுவர தாஸ் மற்றும் சுதேஷ் மகாதோ ஆகிய இருவரையும் அனுப்பி வைத்திருந்தார்.
இக்கூட்டம் முடிந்த பின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:மாவோயிஸ்டுகள் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தி, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல், உடனே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.இப்போது தொடங்கப் பட இருக்கும், “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்பது எவரையும் கொல்லும் திட்டமல்ல.
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தை சீரமைக்கவும் நிலைமையை சீரமைக்கவும் தான் இத்திட்டம்.இத்திட்டம் மெதுவாக நடந்தாலும், வளர்ச்சி கட்டாயம் இருக்கும். மாவோயிஸ்டுகளின் வன்முறை நீடிக்கும் வரை இத்திட்டமும் தொடரும். இன்னும் ஆறுமாதங்களில் இத்திட்டத்தின் மூலம் சில நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தற்போது, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாநிலங்களுக்கிடையிலான கூட்டுப் பாதுகாப்புப் படை முயற்சி, குறிப்பிடத்தக்க பலனளித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதற்கு முன்பு மாவோயிஸ்டுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.படைகளை மட்டுமே பயன்படுத்துவதால் இப்பிரச்னை தீர்ந்துவிடாது. வன்முறைக்கு முடிவுகட்டி, நிர்வாகத்தை சீரமைக்கப் படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு கவனத்துடன் நடத்திவருகிறது.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தன் கருத்தாக, “பீகாரில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள இன்னும் 70 படைக் கம்பெனிகள் தேவைப் படுகின்றன. இப்போது நக்சல் பயங்கரவாதம் மாநிலத்தில் கட்டுக்குள் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.இதற்குப் பதிலளித்த அமைச்சர் சிதம்பரம், “நான் பாட்னாவுக்கோ அல்லது அவர் டில்லிக்கோ வந்தால் பேசிக் கொள்ளலாம். அவர் தனது மூத்த அதிகாரிகளை அனுப்பியுள்ளார். இது ஒரு பிரச்னையே அல்ல’ என்றார்.
வெடிகுண்டு வீச்சு: இதற்கிடையில், இக்கூட்டத்தை எதிர்த்து 72 மணிநேர “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த மாவோயிஸ்டுகள், “பந்த்’தின் இறுதிநாளான நேற்று, ஜார்க்கண்ட் மாநிலம் சோடே கிராமத்தில் இருந்த இரண்டு மாடி உயர்நிலைப் பள்ளியில் வெடி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தப் பள்ளி ஏற்கனவே கடந்த நவம்பரில் மாவோயிஸ்டுகளால் தாக்குதலுக்கு உள்ளானது. இச்சம்பவம் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
Leave a Reply