மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு

posted in: மற்றவை | 0

tbltopnews1_50969660283கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர்.

அத்தோடு இல்லாமல் அங்கிருந்த ஆயுதங்களையும் நக்சல்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த அசாத்தியமான துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியையொட்டியுள்ள பீகார், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் ஆகியபகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட் நக்சல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை தந்து வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிகாரிகளை கடத்தி சென்று கொலை செய்வது போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தீ வைப்பது , மற்றும் போலீஸ் இன்பார்மர்களை கொலை செய்வது இவர்களது முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.

முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை : நக்சல்கள் அட்டூழியத்தை ஒடுக்க ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து செயல்பட ராணுவ வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறப்பித்தார். இதன்படி ராணுவ வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆபரேஷனுக்கு நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் 72 மணி நேர பந்த் அறிவித்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு பிரதமர் தலைமையில் நடந்த அந்நாளில் பல்வேறு தாக்குதல்களை நக்சல்கள் நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. முதல்வர்கள் மாநாட்டில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம், உள் து‌றை அமைச்சர் ப. சிதம்பரம் நக்சல்கள் கொட்டத்தை ஒழிக்க என்ன வழி என தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிந்த 6 நாளில் மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் முகாம் மீது நக்சல்கள் இன்று அதிகாலை 5 .30 மணி அளவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று நடந்தது என்ன ? : இது குறித்து இப்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் என்.எஸ். நிகாம் கூறியதாவது: இங்கு சுமார் 50 பேர் நக்சல்கள் 25 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் முகாம் உள்ளே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தங்களுக்குரிய உணவு சமைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளன. நக்சல்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் 5 பேரை சுட்டு கொன்றனர். பின்னர் தீ வைத்துள்ளனர். இதில் சிக்கி 9 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து அங்கிருந்த ஏ.கே.,47 ரக துப்பாக்கி உள்பட முக்கிய ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தூங்கும் போது தாக்குதல் நடத்துவதே நக்சல்கள் வழக்கம்: ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் சுமார் 25 பேர் இறந்து விட்டனர். மொத்தம் இந்த முகாமில் 51 பேர் இருந்துள்ளனர். எத்தனை பேர் காயமுற்றுள்ளனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நக்சல்கள் தாக்குதல் எப்போதும் அதி‌காலை நேரத்திலேயே இருக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் , இதந்த தாக்குதலும் இன்று காலையில் தான் நடந்துள்ளது. இந்த நேரத்தில் வீரர்கள் பலர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சிலர் சமையல் செய்யும் பணியில் இருந்துள்ளனர். திடீரென வந்த நக்சல்கள் மொத்தமாக வந்த இவர்கள் கையெறி குண்டுகளை வீசியபடி முகாம் உள்ளே நுழைந்தனர். பின்னர் கையில் கிடைத்தவர்களை சுட்டு தள்ளினர். இந்த அதிரடி தாக்குதலில் படை வீரர்களால் எதிர் தாக்குதல் எதுவும் நடத்த முடியவில்லை.

நக்சல் ‌தலைவன் கொக்கரிப்பு : இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மாவோ., நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து மாவோ., தலைவர் கிஷன்ஜி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் சிதம்பரம் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மத்திய அரசு மனித நேயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற இந்த நடவடிக்கைக்கு இந்த தாக்குதல் வழியாகத்தான் நாங்கள் பதில் சொல்வோம். இத்தாக்குதலும் அப்படித்தான். இன்னும் எங்கள் அதிரடி தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *