மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி! விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்

posted in: உலகம் | 0

லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட “கிழக்கிந்திய கம்பெனி’ யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார்.

கி.பி., 1600ல் பிரிட்டனில் பலதரப்பட்ட வியாபாரிகள் சேர்ந்து, வெளிநாடுகளில் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து தம்நாட்டுக்கு செல்வத்தைச் சேர்ப்பதற்காக துவங்கப்பட்டதுதான் கிழக்கிந்தியக் கம்பெனி. இதை அப்போதைய பிரிட்டன் ராணி எலிசபெத் -1 அங்கீகரித்தார்.
பின் அந்தக் கம்பெனி, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கால்பதித்து வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தது. அத்துடன் பிரிட்டன் அரசைப் போல் தனக்கான ராணுவம், கப்பல்கள், கணக்கற்ற ஊழியர்கள், இந்தியாவில் உயர்ந்த பதவிகள், பணம் போன்றவற்றைக் கொண்ட ஆலமரமாக வளர்ந்தது. கடந்த 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரையடுத்து கிலியடைந்த பிரிட்டன், இந்திய நிர்வாகத்தை கம்பெனியிடமிருந்து பறித்து விக்டோரியா ராணியின் நேரடிப் பார்வையில் கொண்டு வந்தது. பின், அதையே காரணம் காட்டி, 1874ல் கம்பெனியை தேசிய மயமாக்கியது. கம்பெனியின் முக்கிய வர்த்தகம், டீ, காபி மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல் செய்து உலகம் முழுவதும் விற்பதுதான்.
இந்தியாவை செருக்குடன் கட்டியாண்ட அந்தக் கம்பெனி இப்போது ஒரு இந்தியர் கையில். ஆம்… மும்பையைச் சேர்ந்த சஞ்சீவ் மேத்தா என்ற இளம் தொழிலதிபர், அந்தக் கம்பெனியை நிர்வகித்து வந்த 40 பங்குதாரர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி விட்டார். அந்தக் கம்பெனியில் 240 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, அதன் முதல் லண்டன் கிளையை மார்ச் மாதத்தில் திறக்க இருக்கிறார். “ஒரு இந்தியனாக என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்; இந்தக் கம்பெனியை நான் வாங்கிய போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது ‘ என்று உணர்ச்சிவயப்பட்டார் சஞ்சீவ் மேத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *