மீனவர்களுக்கு மாற்று தொழிலாக அமையும் மிதவை கூண்டில் சிங்கி இறால் மீன் வளர்ப்பு : மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தகவல்

posted in: மற்றவை | 0

tbltnsplnews_25838434697ராமேஸ்வரம்: “”கடலில் மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் மீன்களை வளர்ப்பது, கடலோர மீனவர்களுக்கு அதிக வருவாய் தரக்கூடிய மாற்று தொழிலாக அமையும்,” என, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி கோபகுமார் தெரிவித்தார்.

மண்டபம் கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்த மணி, தாழைச்சிங்கி மீன்களை சந்தைப்படுத்துதல் குறித்த செயல் விளக்க கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. விலைமதிப்பு வாய்ந்த துடுப்பு மற்றும் ஓடுடைய மீன்களை, மிதவை கூண்டுகள் மூலம் வளர்க்கும் கடல் விவசாய முறை, சமீப ஆண்டுகளாக உலக அளவில் வேகமாக பரவிவருகிறது.
வர்த்தக ரீதியாக குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் தரக்கூடிய சிங்கி இறால்கள், மிதவை கூண்டுகளில் வளர்ப்பதற்கு ஏற்றவை. கடலில் கூண்டுகள் மூலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வளர்த்தால், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் 200 கிராம் எடைவரை வளர்ந்து, நல்ல விலையை பெற்றுத்தரும். இதன் மூலம் கடலில் இயற்கையிலேயே உள்ள சிங்கிஇறால் வளத்தை தக்கவைத்து கொள்ளவதோடு, மீனவர்களுக்கு மாற்றுத்தொழிலாக அமையும். சந்தையில் அதிக விலைபோகும் மணிசிங்கி மற்றும் தாழைச்சிங்கி மட்டுமே, தற்போது கூண்டில் வளர்க்கப்படுகிறது. இதுபோல் 12 க்கும் அதிகமாக வண்ணமீன்களும் கூண்டுகளில் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித்தரும் மிதவை கூண்டுகளில் வளர்க்கப்படும் சிங்கிஇறால்,வண்ணமீன்கள் வளர்ப்பில் ஈடுபட, கடலோர மீனவர்கள் அதிகளவில் முன்வரவேண்டும், என்றார். மூத்த விஞ்ஞானி அப்துல் நாசர் வரவேற்றார். டாக்டர் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய திட்ட அலுவலர் ஸ்ரீகிருபா, டான் பவுன்டேசன் தலைவர் சிங்கராயன், ஒருங்கிணைப்பாளர் ராஜன் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *