மதுரை:சிற்பக் கலைநகரம் அமைப்பது குறித்து யானைமலையை ஆய்வு செய்யும் போது, கோர்ட் உத்தரவின்றி ஒரு சிறிய கல்லைக் கூட தொடக் கூடாது என, மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை சோக்கோ அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி மகபூப்பாட்சா தாக்கல் செய்த மனு:தஞ்சையைச் சேர்ந்த அரசு என்பவர், மூன்று கி.மீ., நீளமுள்ள யானைமலையை குடைந்து சிற்பக் கலைநகரம் அமைக்கலாம் என, சிபாரிசு செய்ததையடுத்து, இதுகுறித்து ஆய்வு நடத்த ஒரு குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.யானைமலையில் இரு இடங்களில் சமணர் படுகைகள், லாடன்கோவில், ஒரு குகை கோவில் உள்ளன. சமணர் படுகைகள், 12ம் நூற்றாண்டை சேர்ந்தவை. குகை கோவில், ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது. தமிழ் பிராமி எழுத்துக்களும் அங்கு காணப்படுகின்றன.
நரசிம்மர் கோவிலில், தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ளன. இம்மலையை பாதுகாக்க வேண்டியது முக்கியம். கிரானைட் குவாரி உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், அரசு உத்தரவு அமைந்துள்ளது.ஆஸ்திரேலியாவில், “அயர்ஸ் ராக்கை’ தற்போதும் பாதுகாத்து வருகின்றனர். யானைமலையை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச்சின்னமாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதை பாதுகாப்பது அரசு கடமை.அரசு உத்தரவிடும் முன்பே சிலர், இப்பகுதியினரை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர். எனவே, ஆய்வுக் குழுவை அமைத்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், பி.ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:”சிற்பக் கலைநகரம் குறித்த ஆய்வு செய்ய மட்டுமே குழுவை அரசு அமைத்துள்ளது. எனவே எந்த அச்சமும் தேவையில்லை’ என, அரசு வக்கீல் இங்கு குறிப்பிட்டார். இருப்பினும் ஆய்வு நடத்தும்போது மலையிலிருந்து ஒரு கல்லைக் கூட கோர்ட் அனுமதியின்றி எடுக்கக் கூடாது. எந்த பாதிப்புமின்றி ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Leave a Reply