“இன்றைக்கு யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்’ என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த, முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்து இல்லத் திருமண விழாவில், அவர் பேசியதாவது: திராவிட இயக்கத்தில் பெண்கள் ஈடுபடுவது சரியா என, அரசியலில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, திராவிட இயக்கத்தில் தன்னை ஒப்படைத்து, பெண்களுக்காக புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் சத்தியவாணிமுத்து. அண்ணாதுரை காலத்தில், அவரால் அமைச்சராக்கப்பட்ட சத்தியாவாணிமுத்து, அண்ணாதுரை மறைவுக்குப் பிறகும், என் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தமிழக அமைச்சரவையிலே ஒருவராக அவர் விளங்கிய காலகட்டத்தில் தான், இந்தியாவிலேயே முதல் முதலாக அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி, பெரம்பூர் தொகுதியில் துவங்கப்பட்டது.
அம்பேத்கர் பெயரில் கல்லூரி துவங்க வேண்டும் என்று நான் சொன்னபோது, “அதை எங்கள் தொகுதியில் துவங்குங்கள்’ என, வலியுறுத்தினார். அப்போது, கல்லூரிகள் துவங்குவதென்றால், அதற்கு ஓரளவு பணம் கொடுக்க வேண்டும். அந்தப் பொறுப்பையும் நானே ஏற்று, ஏ.எல்.சீனிவாசன் என்ற நண்பரிடம் முதல் முதலாக 5,000 ரூபாயை அந்தக் கல்லூரிக்காக பெற்றுத் தந்து, அம்பேத்கர் கல்லூரி பெரம்பூரில் அமைந்து, இன்றும் சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே முதல் முதலாக அம்பேத்கர் பெயரில் கல்லூரி மட்டுமல்ல; சட்டப் பல்கலைக் கழகமும் சென்னையில் தான் அமைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்துக்கு எந்த இடத்தைப் பார்ப்பது, எங்கே கட்டுவது என்றெல்லாம் தேடியபோது தான், எனக்காக ஏற்பாடாகியிருந்த ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை, அம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்காகவே விட்டுக் கொடுத்தேன் என்பது வரலாறு. இன்றைக்கு யார் யாரோ அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர். யார் யாரோ என்று சொல்வதால், எல்லாரும் என கருதிக் கொள்ள வேண்டாம்; ஒரு சிலர் நடத்துகின்றனர். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில், நிறை மாத கர்ப்பிணியான சத்தியவாணிமுத்தை, சிறையில் அடைத்தனர். அப்படிப்பட்ட வீராங்கனையின் இல்லத்தில் நடக்கிற இந்த மண விழா, கலப்புத் திருமணமாக நடப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
Leave a Reply