புது தில்லி, பிப்.18: யூரியா சில்லரை விற்பனை விலையை 10 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யூரியா விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பாதிக்கும் என்பதால் அதனை ஓராண்டு ஒத்திப் போட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது அழகிரி வலியுறுத்தினார். ஆனால் அவரது யோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உரத் துறை அமைச்சகம் தொடர்பான, யூரியா விலையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது, ஊட்டச் சத்து உரத்துக்கான மானியம் தொடர்பான மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து அழகிரி பேச வேண்டியிருந்தது.
இந்த விஷயம் குறித்து அழகிரிக்கு பதிலாக தயாநிதி மாறன் ஆங்கிலத்தில் பேசியதாகத் தெரிகிறது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. ஊட்டச் சத்து உரங்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும். பின்னர் வரும் நிதி ஆண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும்.
இத்துடன் டை அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) மற்றும் பொட்டாஷ் (எம்ஓபி-மியூரியேட் ஆப் பொட்டாஷ்) உரத்துக்கான விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது யூரியாவின் அதிகபட்ச சில்லரை விலை ஒரு குவிண்டால் ரூ. 483 ஆக உள்ளது. அம்மோனியா உரத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ. 935 ஆகவும் பொட்டாஷ் விலை குவிண்டாலுக்கு ரூ. 445.50 ஆகவும் உள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், கந்தகம் உள்ளிட்ட ஊட்டச் சத்து உரங்களுக்கு மானியம் கிடைக்கும். இருப்பினும் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் யூரியா உரத்தின் அதிகபட்ச விற்பனை விலையை அரசே நிர்ணயிக்கும்.
ஏர் இந்தியாவுக்கு ரூ. 800 கோடி: நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 800 கோடி நிதி அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
முதுநிலை மருத்துவ படிப்பு: மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தற்போது உள்ள இடங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சேர்க்க அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உள்ள 148 மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த அனுமதி பொருந்தும். இதன் மூலம் ஆண்டுக்கு 5,000 மாணவர்கள் கூடுதலாக முதுநிலை படிப்பைத் தொடர வழி ஏற்பட்டுள்ளது. இது தவிர, மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒருமுறை வழங்கும் உதவித் தொகைக்கு ரூ. 1,350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply