கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 37 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இலங்கை பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி:இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான ஓட்டுகள், கடந்த மாதம் 27ம் தேதி எண்ணப்பட்டன. ராஜபக்ஷே அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அப்போது, கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும், எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களும் தங்கியிருந்தனர்.அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய, அங்கு சதித் திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, அந்த ஓட்டலை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது. ஓட்டலில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தை விட்டு வெளியேறிவர்கள்; ஒரு பிரிகேடியரும் இதில் அடங்குவார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கொழும்பில் உள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் இருந்து, அங்குள்ள ஒரு கோவிலுக்கு ஏராளமான ஆயுதங்கள் மற்றும் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. அந்த கோவிலில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த ஆயுதம் மற்றும் பணத்தைக் கைப்பற்றினர். இந்த ஆயுதங்களை சப்ளை செய்ததாக, தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும், தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கலாமென, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மேலும் சில மூத்த ராணுவ அதிகாரிகளுக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என தெரிகிறது.இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த சரத் பொன்சேகா, தேர்தல் கமிஷனிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில், “அதிபர் தேர்தலின் போது ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. பல ஓட்டுச் சாவடிகளில், எரிந்த நிலையில் ஏராளமான ஓட்டுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்சேகாவின் செயலர் டிசில்வா கூறுகையில், “ஓட்டும் எண்ணும் மையங்களிலும் மோசடி நடந்துள்ளது’ என்றார்.அதிபர் தேர்தலில் பெரு வெற்றி, அதிபர் பதவியை மேலும் ஓராண்டிற்கு நீடித்து வகை செய்ததின் மூலம் தன் நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறார் ராஜபக்ஷே. இனி அடுத்து வரும் தேர்தலில் பொன்சேகாவையும் கொண்ட எதிர்க்கட்சி அணி தொடராமல் இருக்க, இப்போதே அரசியல் காய்களை ஆளுங்கட்சி நகர்த்த ஆரம்பித்திருக்கிறது.இதுவரை ஆட்சி புரிந்த அதிபர்களில் ஜெயவர்த்தனேயை விட ராஜபக்ஷே கெட்டிக்காரர் என்ற கருத்து எழுந்திருக்கிறது. காரணம், புலிகளுடன் நடந்த சண்டையின் போது சர்வதேச நாடுகள் எந்தவித கேள்வியையும் எழுப்பாத வண்ணம், நாட்டின் இறையாண்மையைக் காக்க, புலிகள் பேச்சுக்கு வந்தால் தயார் என்ற அறிவிப்பை கொடுத்தபடி, தொடர்ந்து போரை நடத்தி வெற்றியும் கண்டார் என்று தற்போது மதிப்பீடுகள் செய்யப்படுகின்றன.
Leave a Reply