மொய்ராபரா(மே.வங்கம்) : பழங்குடியினரால் தாக்கப்பட்ட குரங்கு ஒன்று, கோவில் கருவறையிலிருந்த ராமர்,சீதை சிலைகளைக் கட்டிப் பிடித்தபடியே இறந்தது.மேற்குவங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவிலிருந்து, 30 கி.மீ., தொலைவிலுள்ள பஸ்குர் மொய்ராபரா என்ற கிராமத்தில், நாகதேவதையான மானசா தேவிக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் கருவறையில் மானசாதேவி அருகில் ராமர், சீதை விக்ரகங்களும் இருக்கின்றன.
அந்த கிராமத்தில் பழங்குடியினரும் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் உணவுக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று முள்ளம்பன்றி, முயல், லங்கூர் வகைக் குரங்குகள், நரி, அணில் போன்றவற்றை வேட்டையாடுவது வழக்கம்.ஒருநாள், அவர்கள் லங்கூர் வகைக் குரங்குகளை வேட்டையாடினர். அவற்றில் இரண்டு குரங்குகள் மீது பழங்குடியினர் விட்ட அம்பு தைத்து விட்டது.ஒரு குரங்கு பக்கத்து தோட்டத்தில் விழுந்தது. கிராம மக்கள் அதைக் கவனித்துவிட்டு, அதன் மீதிருந்த அம்பை நீக்கி அதற்கு உணவு கொடுத்துப் பராமரித்தனர். ஒரு மணி நேரத்தில் அது குணமாகி விட்டது.
ஆனால் மற்றொரு குரங்கு, அங்கிருந்த மானசா தேவி கோவிலுக்குள் சென்றுவிட்டது. அதைச் சுற்றி மற்ற குரங்குகள் கதறி சத்தமிட்டபடி இருந்தன. அம்பு ஆழமாகத் தைக்காவிடினும், ரத்தம் அதிகமாக ஒழுகிக் கொண்டிருந்தது.அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர், இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, அருகிலிருந்தவர்களிடம் கூறினார். ஒரு சிலர் அந்தக் குரங்குக்கு சிகிச்சை செய்ய முன்வந்தனர். ஆனால், அந்தக் குரங்கு அதை ஏற்க மறுத்துவிட்டது.
கூட்டத்தில் இருந்த பாரத் கோஷ் என்பவர் அதற்கு தண்ணீர் கொடுத்தார். அதை மட்டும் அந்தக் குரங்கு வாங்கிக் கொண்டது. ரத்தம் ஒரு பக்கம் ஒழுகியபடி இருக்க அந்தக் குரங்கு, மானசாதேவி, ராமர், சீதை சிலைகளை மாறி மாறிக் கட்டிப்பிடிக்க ஆரம்பித்தது.கொஞ்ச நேரத்தில் ராமர் சிலையைக் கட்டிப் பிடித்தபடியே அந்தக் குரங்கு தன் உயிரை விட்டது. அதைப் பார்த்த மக்கள் அழுதனர். அந்தக் குரங்கு அனுமானின் அவதாரம் என்று பேசிக் கொண்டனர். அந்தக் குரங்கின் ரத்தத்தை எடுத்து தங்கள் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டனர்.
Leave a Reply