புதுடில்லி:”டில்லியில் வீடில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு கார்டு தாரருக்கும் 10 லிட்டர் கெரசின் மற்றும் 15 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்’ என, அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் வீடில்லாமல் தவிக்கும் ஏராளமான குடும்பங்கள், கடும் குளிரில் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு தங்குமிட வசதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், “வீடில்லாமல் இருப்பவர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டது. இதேபோல், மற்ற மாநில அரசுகளும், “வீடில்லாமல் பிளாட்பாரங்களில் தங்கியிருப்போருக்கு தங்குமிட வசதியும், உணவும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய டில்லி ஐகோர்ட் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:டில்லியில் வீடில்லாமல் இருப்பவர்கள் இரவில் தங்குவதற்கான கூடாரங்களை, 17ல் இருந்து 24 ஆக உயர்த்த வேண்டும்.
இந்த இரவுக் கூடாரங்கள் அமைப்பதற்கு தேவையான நிலத்தை, டில்லி மாநகர மேம்பாட்டு ஆணையம் வழங்க வேண்டும்.மேலும், வீடில்லாத இந்தக் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகளை தர வேண்டும். அப்படி ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு, 10 லிட்டர் கெரசின் மற்றும் 15 கிலோ உணவு தானியங்களை மானியவிலையில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Leave a Reply