புதுடில்லி:சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கருப்புப் பணத்தை, மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டு வங்கிகளில், ஏராளமான பணத்தை இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ளதாகவும், அவை எல்லாம் முறைகேடான வகையில் சம்பாதிக்கப்பட்டவை என்றும், சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்தப் பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்தால், நாட்டில் வறுமையே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி, லோக்சபாவின் முன்னாள் செகரட்டரி ஜெனரல் சுபாஷ் கஷ்யப் உட்பட சிலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.இதற்கு பதிலளித்த மத்திய அரசு, “வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என, தெரிவித்தது. இந்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இதேபிரச்னை தொடர்பாக, முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி., ஜூலியோ எப்.ரிபேரியோ ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சர்மா, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
Leave a Reply