புதுடில்லி: பயங்கரவாதம் ஒழிப்பு , மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்டவை மையமாக வைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை ( இன்று ) நடைபெற்று வருகிறது.
இரு நாட்டு வெளியுறவு செயலர்கள் நிரூபமாராவ் ( இந்தியா ), சல்மான் பஷீர் ( பாகிஸ்தான் ) ஆகிய இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர். பாகிஸ்தான் செயலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த பேச்சில் கலந்து கொண்டுள்ளனர். மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்களுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு, மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை ஒப்படைப்பது, எல்லையில் ஊடுருவல் உள்ளிட்ட விஷயங்களில் பாகிஸ்தான் அரசு தரும் உத்திரவாதம் எந்த அளவிற்கு இருக்கும் என இந்தியா எதிர்பாக்கிறது. இதன் அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என நிருபமா ராவ் தெரிவித்தார்.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலிபான் தலைவர்: இந்த பேச்சில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சையதுவை ( பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலிபான் தலைவர் ) கைது செய்ய வேண்டும். இவனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜமா உத் தவா அமைப்பை சேர்ந்த அப்தூர் ரஹ்மான் மாலிக்கையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக அங்குள்ள வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஒத்துக்கொண்டதாகவும் தெரிகிறது. தொடர்ந்து பாக்., குழுவினருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
பயங்கரவாத பிரச்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் என்று இந்தியா கூறி வரும் நேரத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி உள்ளது.
டில்லி ஐதராபாத் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக பாக்., செயலர் சல்மான் பஷீர் கூறுகையில் : இந்தியாவுக்கு பேச்சு நடத்த வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வேறுபாடுகள் களைந்து நல்ல முடிவுகள் பிறக்கும் என நம்புவதாக கூறினார். இன்று நடக்கும் பேச்சுவார்த்தை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனை வரவேற்பதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இருவரும் இந்த பேச்சு முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார்களா அல்லது தனியாக தங்களுடைய பேச்சு விவரத்தை அறிவிப்பார்களா, கூட்டறிக்கை எதுவும் இருக்குமா? என்ற விவரத்தை பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இருநாட்டு பிரச்னையில் இன்று நடக்கும் பேச்சில் எனக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என டில்லியில் நடந்த ஒரு விழாவில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply