சென்னை : டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் வசிக்கும் மக்கள் பலருக்கு பல்வேறு நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன. இங்கு நல்ல தரமான சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க முடியாமல் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, நம் நாட்டில் சுகாதார நலன் மற்றும் சுகாதார கல்வி அளிப்பதில் மோசமான நிலை உள்ளது. மதுபானம் குடிப்பது ஒரு நோய் போன்றது, மரணத்திற்கும், உடல் ஊனத்திற்கும் முக்கிய காரணமாக இது திகழ்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மது குடிப்பதன் மூலம் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக மதுபான விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. தற்போது, டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை நடக்கிறது. தமிழகத்தில், 8,000 மதுபானக் கடைகள் உள்ளன. உரிமம் பெற்ற “பார்’கள் 6,250 உள்ளன. உரிமம் பெறாத “பார்’களும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 34 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவதற்கு, உலக சுகாதார அமைப்பு தெரிவித்த பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என அரசு விதிமுறை உள்ளது. ஆனால், அரசின் கொள்கை மற்றும் உத்தரவுகள் மீறப்படுகின்றன. 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. சிறுவர்கள் “பார்’களில் வேலை செய்வதையும் பார்க்க முடிகிறது. இது குழந்தைகளின் உரிமையை மீறுவதாகும். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் மதுபானக் கடைகள் இருக்கக் கூடாது என விதிமுறை உள்ளது. ஆனால், இந்த உத்தரவு பின்பற்றப்படுவது இல்லை. மாநில வருவாயில் 30 சதவீதம் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. விரிவான சந்தை மற்றும் வினியோகம் மூலம் இந்த அளவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அரசின் நோக்கத்தை பார்க்கும் போது,வருவாயை பெருக்கும் நோக்கம் தான் உள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
லாபத்தை மனதில் கொண்டு, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொள்ளாமல் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நல அரசு என்றால், மக்களின் நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருவாய்க்கு அல்ல. மதுபானம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருமானம் வந்தாலும், குடிப்பதை தடுப்பதற்கும், குடிபோதையில் இருந்து மீட்பதற்கும் எந்தஅளவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரம் இல்லை. எனவே, 21 வயதுக்கு குறைவானர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது, இவர்கள் “பார்’களில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசின் அங்கீகாரம் பெறாத மீட்பு மையங்கள், கவுன்சிலிங் மையங்களை கண்டறிந்து அவற்றை மூட உத்தரவிட வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடி போதைக்கு அடிமையாகும் நோயில் இருந்து காப்பதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியாக ஒரு ஏஜன்சியை துவங்க உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் அனைத்து தொடக்க சுகாதார மையங்களில் போதை மறுவாழ்வு மையங்களை துவங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசுக்கு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது. விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
Leave a Reply