புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் சணல் தொழிலாளர்கள் நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டத்தை 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவேன் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியிடம் உறுதியளித்துள்ளார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனை, டெல்லியில் அவரது இல்லத்தில், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, சுகாதாரத்துறை இணை அமைச்சர் தினேஷ் திரிவேதி, மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுகர்த்தா முகர்ஜி ஆகியோர் சந்தித்து பேசினர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
சந்திப்பிற்கு பிறகு மம்தா பானர்ஜி கூறியதாவது:
சணல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிறுவனங்கள் சரியான முறையில் சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்காததால், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதியில் இருந்து சணல் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சணல் தொழிற்சாலைகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், சணல் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். விரைவில் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதாக தயாநிதிமாறன் உறுதியளித்துள்ளார்.
தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
சணல் தொழிலாளர்கள் பிரச்னைகள், போராட்டங்கள் குறித்து தொழிற்சாலை நிறுவனங்களுடனும், சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மாநில அரசின் கீழ் தொழிற்சாலைகள் வருவதால் பிரச்னையை தீர்ப்பதில் கால தாமதமாகிறது.
மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, சணல் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் 7 நாட்களுக்குள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு தயாநிதி
மாறன் தெரிவித்தார்.
Leave a Reply