திருச்சி, பிப். 24: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாவட்ட திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (பிப். 26) தொடங்கவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் 97,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதுகுறித்து முகாம் அமைப்பாளர் கே.என். ராமஜெயம் புதன்கிழமை தெரிவித்தது:
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் இந்த முகாம் தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் இன்போசிஸ், நோக்கியா, டி.சி.எஸ்., சி.டி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் உள்பட 443 நிறுவங்கள் பங்கேற்கின்றன. தவிர, வங்கிகள், மருந்து நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.
இவற்றில், ஏறத்தாழ 97,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில், திருச்சியில் உள்ள நிறுவனங்களில் மட்டும் சுமார் 5,000 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. முகாமில் 443 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் (வெள்ளிக்கிழமை) 26 அரங்குகளும், இரண்டாம் நாளில் 27 அரங்குகளும், மூன்றாம் நாளில் 28 அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.
இதில், பங்கேற்பதற்காக ஏறத்தாழ 1.25 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊக்குவிப்பு முகாமில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் மட்டுமே 45 சதம் பேர். ஆனால், பதிவு செய்து ஊக்குவிப்பு முகாம்களில் பங்கேற்றவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள முடியும்.
முகாமில் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 5 நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கோரி பங்கேற்கலாம். சில நிறுவனங்கள் பணி நியமன ஆணையை பிப். 28}ம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில் வழங்கவுள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ற பல்வகைத் திறன்களை மேம்படுத்தும் வகையில், கலைஞர் அறிவாலயத்தில் விரைவில் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
இதேபோல, தொழிலகத் தொழிலாளர்களுக்கு திறனை மேம்படுத்தும் வகையில், பெல்சியா அமைப்பு மூலம் கேர் பொறியியல் கல்லூரியில் பயிற்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராமஜெயம்
Leave a Reply