அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய கூட்டு?கருணாநிதி திடீர் சந்தேகம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_10871523619சென்னை:’அ.தி.மு.க.,வையும் கூட்டு சேர்த்து, பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு, அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இப்போது நடக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலில், ராமதாசுக்கு, எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும், வெறுப்பும், சொல்லப் போனால் அ.தி.மு.க.,வுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு ஏற்பட்டு, தி.மு.க.,வைப் பற்றியும், என்னைப் பற்றியும் ஒருமையில் பேசி, தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க., தான் தன் முதல் எதிரி என்றும், அதை ஒழிப்பது தான் தன் முக்கிய பணி என்றும் கூறியுள்ள ராமதாஸ், அதற்காக அ.தி.மு.க.,வுடனும் இந்தத் தேர்தலில் ரகசியமான கூட்டுச் சேர்ந்து பென்னாகரம் இடைத்தேர்தலைச் சந்திப்பார் என்பதற்கு ஆதாரம், அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.இரண்டொரு வாரங்களுக்கு முன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும், அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும், திடீரென தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும், மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டேன். அந்த ஆச்சரியத்தை அவரது கடந்த கால நடவடிக்கைகளும், அறிக்கைகளும், பேச்சுக்களும் போக்கியது.

அ.தி.மு.க.,வையும் கூட்டு சேர்த்துக் கொண்டு, இந்த இடைத்தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு, அந்த வட்டாரத்தில் உருவாகியிருப்பதை, நான் மட்டுமல்ல; அவருடைய அறிக்கைகளை, பேச்சுக்களைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடிகிறது.எனவே, தேர்தல் களப் பணியாற்றும் கட்சித் தொண்டர்களும், கூட்டணி நண்பர்களும், என்ன தான் அவர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும், அன்போடும் செயல்பட வேண்டும்.வாக்காளர்களை சந்திப்பதிலும், வெற்றி ஒன்றில் மட்டுமே நாம் நாட்டம் கொண்டு, அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய சக்திகளுக்கு, தீவிரவாத சக்திகளுக்கு, சற்றேனும் இடம் தராமல், கருமமே கண்ணாயினார் என்ற முதுமொழிக்கேற்ப, ஜனநாயகத்தை அலுங்காமல் குலுங்காமல் காக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *