நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.
நியூயார்க் சென்றுள்ள அமைச்சர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பறிக்கின்றன என்ற தவறான கருத்து மக்களிடையே உள்ளது. இதை முதலில் அமெரிக்க மக்களும், நிறுவனங்களும் மாற்றிக் கொள்ளவேண்டும்.
2009-டன் முடிவடைந்த ஆண்டில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட பிபிஓ நிறுவனங்களால் 10,600 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்தது. இந்த நிறுவனங்களால் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் 2.50 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்தது.
இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்காக அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்பது வெறும் மாயை.
இதுபோன்ற தவறான கருத்துகளால் இந்திய, அமெரிக்க நாடுகளிடையே வர்த்தக உறவு பாதிக்கப்படும். எனவே அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு இங்குள்ள உண்மையான நிலையை அமெரிக்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் விளக்கவேண்டும்.
உண்மையான நிலையை தெரிந்துகொள்ளாவிட்டால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கக்கூடும் என்றார் அவர்.
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஆனந்த் சர்மா, முன்னதாக அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ரான்கிர்க்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது இந்திய நிபுணர்களுக்கான அமெரிக்க விசா விதிமுறைகளைத் தளர்த்துமாறு சர்மா கேட்டுக் கொண்டார்.
Leave a Reply