அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது: முட்டையில் இருந்து உயிர்ப்பிக்க முயற்சி

posted in: உலகம் | 0

tblworldnews_67737543583மடகாஸ்கர்:உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட “யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.

நெருப்புக் கோழி மற்றும் ஈமு வகை கோழியை போன்று உருவ அமைப்புடன் அளவில் மிகவும் பெரியதாக காணப்படுவது “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்ட்). இது 10 அடி உயரமும், அரை டன் எடையும் கொண்டது.ஆப்ரிக்கத் தீவுகளில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறும் வரை, இவ்வகை பறவை அங்கு காணப்பட்டது. அவர்கள் குடியேறிய சில ஆண்டுகளிலேயே, இந்தப் பறவை இனம் இறைச்சி மற்றும் முட்டைக்காக தொடர்ந்து வேட்டையாடப்பட்டதால், காலப்போக்கில் அழிந்து போயின. இந்த பறவையின் முட்டை, சாதாரண கோழி முட்டையை விட 160 மடங்கு பெரிது. தற்போது காணப்படும் ஈமு கோழியை விடப் பெரியது. மூக்கு குத்தீட்டி போல பெரியதாக இருக்கும்.

மடகாஸ்கரின் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பறவைகளின் பழைய கூடுகளில் காணப்பட்ட முட்டை ஓடுகளை, ஷெப்பீல்டு பல்கலைகழகத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.அழிந்து போன பறவை இனங்களான நியூசிலாந்து நாட்டை சேர்ந்த “மோவா’ மற்றும் மடகாஸ்கர் பகுதியை சேர்ந்த “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) போன்ற பறவையினங்களின் முட்டை ஓடுகளில் இருந்து அவற்றின் மரபணுவை பிரித்தெடுக்கும் முறையை, விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அவ்வாறு வெற்றிகரமாக டி.என்.ஏ.,வை பிரித்தெடுத்து அதன் மூலக் கூறுகளைக் கண்டறிந்தால், அதன் மூலம் அழிந்து போன பறவை இனங்களை போன்ற தோற்றம் கொண்ட, ஒன்றை, குளோனிங் மூலம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,”முட்டை ஓடுகளில் இருந்து பழமையான டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பது தான், தொல்பொருள் மற்றும் புதைபடிவ ஆராய்ச்சியில் இருக்கும் முக்கியமான ஒன்று. பழமையான டி.என்.ஏ., படிவங்களை போதுமான அளவு பெறுவது, மிகவும் சவாலாக உள்ளது. பொதுவாக, அழிந்து போன இனங்களின் புதைபடிவங்கள் ஆகியவை எங்காவது சில இடங்களில் சிறிதளவே உ ள்ளது’ என்றார்.இந்த “யானைப் பறவை’ (எலிபண்ட் பேர்டு) மிகப் பெரிய கால்கள், கூர்மையான நகங்கள், நீண்ட சக்தி வாய்ந்த கழுத்து மற்றும் ரோமம் போன்ற இறகுகளால் மூடப்பட்டு காணப்படும். பார்க்க மிகவும் பெரிதாக பயமுறுத்தும் தோற்றுத்துடன் இப்பறவை காணப்பட்டாலும், இதன் உணவு தாவரங்கள். மடகாஸ்கர் பகுதியில் இந்த பறவை ஆறு கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன.

இதே போன்று, நியூசிலாந்தில் வாழ்ந்து 18ம் நூற்றாண்டில் அழிந்த பறவை இனம் “மவோ’. இது யானையை விட உயரமானது.இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் முர்டாச் பல்கலைகழகத்தை சேர்ந்த உயிரியல் வல்லுனரான சார்லட் ஓஸ்காம் என்பவர் கூறுகையில்,”இந்த முட்டை ஓடுகள் மூலம் புதிய வகை டி.என்.ஏ., குறித்த தகவல்களை அறியலாம். பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பறவைகளின் பழங்கால முட்டை ஓடுகளில் டி.என்.ஏ.,க்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது முதல் ஆதாரம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *