ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:ஸ்டாலின் முன்னிலையில் ஆதங்கம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_98385256529சென்னை:”காங்கிரஸ், 67ல் விட்ட ஆட்சியை, குமரி அனந்தன் தனது 77 வயதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 77வது பிறந்த தினவிழா, சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்ட, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் விழா, குமரி அனந்தன் எழுதிய 18 புத்தகங்கள் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழா சென்னையில் நேற்று நடந்தது.விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், விழாவில் கலந்து கொண்டு குமரி அனந்தன் நூல்களை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:குமரி அனந்தன் எம்.பி.,யாக பணியாற்றிய போது தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத் தந்தார். மணியார்டர் படிவம், காசோலை ஆகியவற்றில் தமிழை இடம் பெற வைத்தவர். டில்லியில் உள்ள ஒரு சாலைக்கு காமராஜர் பெயரை சூட்ட காரணமாக இருந்தவர்.அவர் எழுதிய நூல் பல்கலைக் கழகத்தில் பாடமாக உள்ளது. இளைஞர் களுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும். ‘எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை விட சுப்பிரமணிய சிவாவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கியதே எனக்கு மிகப் பெருமையாக உள்ளது’ என, என்னிடம் குமரி அனந்தன் கூறினார்.தமிழுக்கும், இளைஞர்களுக்கும் அவரது தொண்டு தொடர வேண்டும். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தொடர்ந்து அவர் வழி காட்ட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:பொதுவாக 25, 55, 65, 75வது பிறந்த நாளை கொண்டாடுவதுண்டு. குமரி அனந்தன் 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறாரே என, யோசித்தேன். அதாவது 67ல் விட்ட காங்கிரஸ் ஆட்சியை 77ல் பிடித்து விட வேண்டும் என நினைத்து தான் இந்த விழாவை கொண்டாடுகிறார் போலும்.காமராஜர் காலத்தில் திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன் போன்றவர்கள் அதில் இடம் பெற்றிருந்தனர்.ராகுல் தமிழகத்தில் விஜயம் செய்த பின், பெரும்பாலான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர். மொழி மீது யாருக்கும் வெறி இருக்கக் கூடாது.

ஆங்கிலத்தில் பேசினால் அதுவும் ஒரு ஓசை. காபி என்பதை கொட்டை வடிநீர் என்று மொழி பெயர்ப்பது தேவையற்றது. அதற்காக நான் தமிழ் மொழி மீது பற்று இல்லாதவன் அல்ல. மொழியை மட்டும் பிடித்துக் கொண்டு பேசக் கூடாது. இளைய சமுதாயம் அடுத்த தலைமுறையில் முன்னேறுவதை பற்றி சிந்திக்க வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன், கிருஷ்ணசாமி எம்.பி., சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், வசந்தகுமார் எம்.எல்.ஏ., மற்றும் எஸ்.பாஸ்கர், எம்.ஜி.ராமசாமி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *