கடந்த வாரம் காபூல் நகரில் 2 ஹோட்டல்களில் தங்கியிருந்த இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டுதான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 26-ம் தேதி காபூல் நகரில் இந்தியர்கள் தங்கியிருந்த இரண்டு ஹோட்டல்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 இந்தியர்கள், இத்தாலியர் ஒருவர், பிரெஞ்ச் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், 3 ஆப்கன் போலீஸôர், 4 பொதுமக்கள் என மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
÷ஆப்கன் உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அன்சாரி கூறிய தகவல்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் மீதான தாக்குதலில் ஆப்கன் தலிபான்களுக்கு தொடர்பில்லை. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹோட்டலில் தங்கியிருந்த இந்தியர்கள் குறித்து முழு விவரங்களையும் தெரிந்துகொண்டுதான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 4 தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வேனுடன் பிரதான சாலையில் தயாராக இருந்தார்.
÷பர்கா அணிந்து வந்தனர்: 3 தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழையும்போது முஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவை அணிந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மறைத்து கொண்டுசென்றுள்ளனர்.
÷ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் இந்தியர்களின் பெயரை சத்தமாகக் கூறியபடியே, ஒவ்வொரு அறையாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் உருது மொழியில் பேசியதும் தெரியவந்துள்ளது.
÷எனினும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் தகவல்படி பாகிஸ்தானைச் சேர்ந்த ஹக்கானி என்ற தலிபான் தீவிரவாத அமைப்புதான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஹக்கானி மற்றும் லஷ்கர் தீவிரவாத அமைப்புகள் இணைந்து திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்நிலையில் கடந்த வாரம் தில்லியில் இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்கில் லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply