இந்தியாவுக்குப் போட்டியாக ராணுவ பலத்தை உயர்த்தச் சொன்னார் பொன்சேகா! – ராஜபக்சே

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே சிங்கப்பூர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பெடரல் சிஸ்டம் (கூட்டாட்சி முறை) என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அது பிரிவினையுடன் தொடர்புடையது. கட்டாயம் பிரிவினையில்தான் போய் நிறுத்தும். பெடரல் சிஸ்டத்தை ஆதரித்தால் நான் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

விடுதலைப் புலிகளுடான போரின் இலங்கை பெற்ற வெற்றிக்கு பொன்சேகா சொந்தம் கொண்டாட முடியாது. போரின் இறுதி நாள்களில் பொன்சேகா சீனாவில் விடுமுறையில் இருந்தார்.

அவரைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்திருக்கலாம். நான் அனுமதிக்காதவரை அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற முடியாது. வேட்புமனுத் தாக்கல் முடியும்வரை அவரது ஓய்வுபெறும் கோரிக்கையை நான் தள்ளி வைத்திருக்கலாம். நான் பயந்துவிட்டேன் என மக்களால் சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தேன்.

இந்தியாவின் அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 200000ல் இருந்து 450000 ஆக உயர்த்த வேண்டும் என பொன்சேகா விரும்பினார்.

இந்தியாவிடம் 1.5 மில்லியன் தரைப்படை வீரர்கள் உள்ளனர். இதுதவிர 1 மில்லியன் துணை ராணுவப் படையினர் உள்ளனர். எனவே 2.5 மில்லியன் வீரர்களுக்கு முன் வெறும் 450000 வீரர்கள் என்ன செய்துவிட முடியும். எனவே வெளிநாடு குறித்த கவலையை என்னிடம் விட்டுவிடுங்கள் என அவரிடம் கூறினேன்.

ராணுவப் புரட்சி குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து விவரங்களையும் விரிவாகக் கூற முடியாது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது போலீசார், பாதுகாப்புப் படையினரின் பணி. அவர்களை அதைச் செய்து வருகின்றனர்.

பொன்சேகா குற்றவாளியா, இல்லையா என்பது எனது கவலை அல்ல. எனினும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *