இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 17-ம் தேதி வாஷிங்டனில் கையெழுத்தாகிறது. இதற்காக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ஆனந்த் சர்மாவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரான் கிர்க்-கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
இந்த பயணத்தின்போது அமெரிக்க வர்த்தக அமைச்சர் கேரி லாக் மற்றும் வேளாண் அமைச்சர் டாம்வில்சாக் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார் ஆனந்த் சர்மா. இரு நாடுகளிடையே வர்த்தகம், வேளாண்மை ஆகிய துறைகளில் உறவை மேம்படுத்துவது குறித்து அப்போது அவர் விவாதிப்பார். தொழில் வர்த்தக முதலீடு குறித்த இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் வகுக்கப்பட்டு அதில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் ராகுல் சாப்ரா தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா வர்த்தக கொள்கை வகுக்கும் அமைப்பு 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிறகு ஏற்படுத்தப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவர்களாக ஆனந்த் சர்மா, கிர்க் ஆகியோர் இருப்பர். இந்த அமைப்பில் 5 முக்கிய குழுக்கள் இடம்பெற்றுள்ளன.
இக்குழுக்கள் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன் அளிக்கும் வகையிலான துறைகளைக் கண்டறிந்து பரிந்துரைகள் அளிக்கும். எந்தெந்த தொழில்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும், எவற்றுக்கு வரிகள் நீக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை அளிக்கும்.
இரு நாடுகளைச் சேர்ந்த முக்கியமான தொழிலதிபர்கள் இந்திய-அமெரிக்க ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு செப்டம்பர் 2007-ல் ஏற்படுத்தப்பட்டது. வர்த்தகக் கொள்கைகளை வகுப்பதற்கு உரிய ஆலோசனைகளை இக்குழு அளிக்கும்.
Leave a Reply