ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை, மனித உரிமையை மதித்தல் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் “ஆல்டஸ் குளோபல் அலையன்ஸ்’ என்ற நிறுவனம், 20 நாடுகளின் 211 நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்தது. இதில், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாக்புரி போலீஸ் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா, பிரேசில், மலேசியா, மெக்சிகோ உள்ளிட்ட 20 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட வித்யாக்புரி போலீஸ் நிலையத்துக்கு நைஜீரியாவில் வரும் 25ம் தேதி நடக்கும் விழாவில் விருது வழங்கப்பட உள் ளது.இந்த போலீஸ் நிலைய அதிகாரி இவ்விருதை பெற்றுக்கொள்வார்.வித்யாக்புரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். போலீஸ் நிலைய லாக்கப்பில் ரகசிய கேமரா 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கிறது.
போலீஸ் நிலையத்தில் எப்போது வேண்டுமானாலும் காபி, டீ பருகுவதற்கான இயந்திரம் உள்ளது. ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்வதற்கு தனி தனியான வண்ணத்தில் கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த போலீஸ் நிலையம் தூய்மையாக வைக்கப்பட்டு கண்கவரும் வரவேற்பறையில் “பிளாஸ்மா டிவி’யும், போலீசார் உடற்பயிற்சி செய்வதற்கு உடற்பயிற்சி அறையும் உள்ளது.ராஜஸ்தானில் உள்ள வித்யாக்புரி போலீஸ் நிலையம் உட்பட 50க்கும் அதிகமான போலீஸ் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்றுள்ளன.சண்டிகாரில் உள்ள 17வது செக்டார் போலீஸ் நிலையமும், கேரளாவில் உள்ள வடக்கன்சேரி காவல் நிலையமும் சிறப்பான போலீஸ் நிலையங்கள் என அல்டஸ் குளோபல் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Leave a Reply