ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக நம்நாட்டில் மார்பக புற்றுநோயை விட கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு, கீமோ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையால் முடி கொட்டுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது, புற்றுநோய் செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைக்கு மாற்றாக புற்றுநோய் செல்களை அழிக்கும் வைரசை ரத்தத்தில் செலுத்தும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை ஏற்கனவே, பிரிட்டனில் நடந்துள்ளது. நல்ல பலன் கிடைத்துள்ளதால், அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமாக 20 முதல் 50 புற்றுநோயாளிகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத எலிகளை கொண்டு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியில்லாத இரண்டு எலிகளின் கட்டியில் ஆன்கோலைட்டிக் வைரஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த வைரஸ் செலுத்தப்பட்டதும் எலிகளின் உடலில் இருந்த கட்டி இரண்டு வாரத்தில் மறைந்துவிட்டது. இந்த வைரஸ் புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது. பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவில் இந்த சோதனை முதல் முறையாக தற்போது நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *