விருதுநகர் : ஊனமுற்றோர் அனைவருக்கும் பொதுப்பள்ளிகளில் இடைநிலைக்கல்வி வழங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
தாழ்வு மனப்பான்மை இல்லாமல் கல்வி: சிறப்பாசிரியர்கள் மூலம் ஊனமுற்றவர்களுக்கு தனியே கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இத்திட்டம் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டது. தற்போது, இதை மாற்றி பொதுப்பள்ளிகளில் ஊனமுற்றோருக்கு கல்வி கற்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக 9ம் வகுப்புக்கு மேல் பிளஸ் 2 வரை அனைத்து ஊனமுற்றோருக்கும் கல்வி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி: இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஊனமுற்றோரின் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புதிய சலுகைகள்: ஊனமுற்றோரின் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் உதவித்தொகையும், பள்ளிக்கு செல்வதற்கு மூன்று சக்கர சைக்கிள்கள், காதொலி கருவிகள் உட்பட அனைத்து ‘கிட்’களும் வழங்கப்படுகின்றன. அனைத்து பெற்றோரும் ஊனமாக உள்ள தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் படி, பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தி வருகிறது.
பொதுப்பள்ளிகளில் பிற மாணவர்களுடன், படிக்க வைப்பதன் மூலம் ஊனமுற்ற மாணவர்களுக்கு ஏற்படும் தாழ்வுமனப்பான்மையை தவிர்க்க முடியும். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கி பிறரை போல வாழ வைக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply