சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் கடந்த 1990ம் ஆண்டில் தி.மு.க., அரசால் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின், அத்திட்டம் படிப்படியாக மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவது போல, 2007ம் ஆண்டில், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவியருக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் உதவி பெறும் தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவ, மாணவியருக்கும் இலவச பஸ் பயணச் சலுகையை வழங்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், 21 ஆயிரத்து 500 மாணவ, மாணவியர் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று கோடியே 84 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply