சென்னை : “ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த சினிமா படத் தயாரிப்பாளர் ஹென்றி என்பவர் தாக்கல் செய்த மனு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை நடத்தும் முறையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் வழி முறைகளையும் மத்திய அரசு உருவாக்கலாம். இதனால், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்குவதை கண்காணிக்க முடியும். சூதாட்டம், வெற்றி தோல்வியை முன்கூட்டியே நிர்ணயிப்பது போன்றவை நடக்காமல் தடுக்கலாம்.
வரும் 12ம் தேதி ஐ.பி.எல்., சீசன்-3 போட்டி துவங்க உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 25 வரை நடக்க உள்ளது. பெரும்பாலான நாட்களில் தினசரி இரண்டு போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டிகள் “டிவி’ மற்றும் இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பப்படும். மேலும், மீடியாக்கள் இந்த போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். லட்சக்கணக்கான மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை மார்ச், ஏப்ரலில் எழுத உள்ளனர். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியும் மார்ச், ஏப்ரல் மாதம் வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். மாணவர்களின் கவனம் சிதறும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. போட்டியை ஏற்பாடு செய்பவர்கள், மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இந்தத் தொடரை தேர்வு நேரத்தில் நடத்தாமல் வேறு தேதிகளுக்கு தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய “முதல் பெஞ்ச்’, “மத்திய அரசு மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை மனுதாரர் அணுக வேண்டும். மத்திய அரசு இந்தப் பிரச்னையை கவனிக்கும். அவ்வாறு கவனிக்கத் தவறினால், கோர்ட்டை மனுதாரர் அணுகலாம்’ என உத்தரவிட்டது. இதையடுத்து, ஹென்றி தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசுக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போட்டியை தள்ளிவைக்கவில்லை. பிளஸ் 2 தேர்வு துவங்கி விட்டது. 10ம் வகுப்பு தேர்வு விரைவில் துவங்க உள்ளது. எனவே, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை தள்ளிவைக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தியாகேஸ்வரன், ஐ.பி.எல்., சார்பில் சீனியர் வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகினர்.
“முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசுக்கு ஒரு மனுவை அனுப்பினால், அதன் மீது முடிவெடுக்கப்பட வேண்டும். பள்ளி தேர்வும், கிரிக்கெட் போட்டியும் ஒன்றாக வருவதாக மனுதாரர் கூறியுள்ளார். மனுதாரர் அனுப்பிய மனுவின் மீது மத்திய விளையாட்டு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும். ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை பற்றி கூறியுள்ளது. அனுப்பிய மனு மீது மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு. எனவே, மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply