சென்னை : ‘ஆரம்ப நிலை பணி, பதவி உயர்வுக்கான பணிகளில் ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்காது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு பைசல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘அரசு பணிகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை நியமிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து, அரசு பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். இதேபோல் வருவாய்த் துறை ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், ரங்கராமானுஜம் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். வழக்கை நீதிபதிகள் முருகேசன், சத்யநாராயணன் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு: கடந்த பிப்ரவரி 3ம் தேதி, சில வழிமுறைகளை நிர்ணயித்து புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெயர் பட்டியலை பெற்று நியமனம் செய்ய வேண்டிய பணிகளில் ஓய்வு பெற்றவர்களை நியமிக்கக் கூடாது. இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு போதுமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்டெனோ டைப்பிஸ்ட் மற்றும் டைபிஸ்ட் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிக்க மாட்டோம். புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அல்லது பதவி உயர்வு, இடமாற்றம் மூலம் நியமிக்கப்பட்ட உடன், காலி பணியிடங்களில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் நீக்கப்படுவர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அரசு எடுத்துள்ள நிலை, அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும்போது, மனுதாரர் கூறியுள்ள குறைகளை அரசு கவனித்துள்ளது. மேற்கொண்டு மனுதாரருக்கு எந்த குறையும் இருக்க முடியாது. ஏனென்றால் ஆரம்ப நிலை பணிகளிலோ, பதவி உயர்வு மூலம் வரும் பணிகளிலோ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை நியமிக்க மாட்டோம் என அரசு தெரிவித்துள்ளது. இம்மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply