கடைசி ஓவரில் கோல்கட்டா அணி வெற்றி

sourav-gangulyமும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி ஆட்டம் வீணானது.


மூன்றாவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர், நேற்று மும்பையில் துவங்கியது. முதல் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான “நடப்பு சாம்பியன்’ டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கங்குலியை கேப்டனாக கொண்ட கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. “டாஸ்’ வென்ற கில்கிறிஸ்ட், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
மாத்யூஸ் அபாரம்:
கோல்கட்டா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் மனோஜ் திவாரி, கேப்டன் கங்குலி இருவரும் “டக்’ அவுட்டாகினர். பின் புஜாரா (10), ஹாட்ஜ் (13) ஏமாற்றினர். கோல்கட்டா அணி, 31 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் வந்த ஓவைஸ் ஷா (58 ரன், 3 சிக்சர், 3 பவுண்டரி), மாத்யூஸ் (65 ரன், 4 சிக்சர், 5 பவுண்டரி ) இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோல்கட்டா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
கில்கிறிஸ்ட் அதிரடி:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு கில்கிறிஸ்ட், லட்சுமண் அபார துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் லட்சுமண் (22) வீழ்ந்தார். மறுமுனையில் சிக்சர், பவுண்டரிகளாக கில்கிறிஸ்ட் விளாசிய கில்கிறிஸ்ட் 35 பந்துகளில், 54 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்தார். பின் கிப்ஸ் (19), சைமண்ட்ஸ் (5), ரோகித் சர்மா (13), அனிருத் (14), வாஸ் (0) என வரிசையாக ஏமாற்றினர்.
கோல்கட்டா வெற்றி:
கடைசி 6 பந்தில், டெக்கான் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சுமன் (7), ஜஸ்கரன் (4) இருவரும், 6 ரன்கள் மட்டும் எடுத்தனர். டெக்கான் சார்ஜர்ஸ், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
கங்குலியின் “புதிய’ கேப்டன் அவதாரம், “புதிய’ பயிற்சியாளர்கள், “புதிய’ “டி’ சர்ட் என பல புதுமைகளுடன் களம் புகுந்த கோல்கட்டா அணி, முதல் போட்டியில் வெற்றியை ருசித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *