கருத்து கணிப்பை முழுமையாக ஏற்க மாட்டேன் * பென்னாகரத்தில் கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_91390627623பென்னாகரம்:யாருக்கு செல்வாக்கு அதிகம் என, கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். கருத்துக் கணிப்பில் தி.மு.க., முதலிடம், பா.ம.க., இரண்டாமிடம், அ.தி.மு.க., மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியாக இருந்த கட்சி, மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதில், நான் வேதனை அடைகிறேன்,” என, பென்னாகரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.பென்னாகரம் அண்ணாதுரை திடலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எத்தனையோ இடைத்தேர்தல் நடந்த போது வராதவர் இந்த தேர்தலுக்கு ஏன் வருகிறார்’ என, எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். நான் வந்த நோக்கம் வேறு. சரித்திரம் வாய்ந்த சட்டசபை கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு அழைப்பு விடுக்கவே வந்துள்ளேன். நீங்கள் அங்கு வந்து பாருங்கள். ‘நாங்கள் எப்படி வர முடியும்’ என, நீங்கள் கேட்கலாம். உங்கள் சார்பில் உங்கள் வேட்பாளரை அங்கு அனுப்பி வையுங்கள்.

சட்டசபையின் பெருமையை உங்களிடம் வந்து சொல்வார்.புதிய சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு முறையான அழைப்பு இல்லை. அதனால் தான் வரவில்லை’ என, சிலர் சொல்கின்றனர். மற்ற மாநில நிகழ்ச்சி, அகில இந்திய நிகழ்ச்சியானாலும், இலங்கை பிரச்னை என்றாலும், அனைத்து கட்சி கூட்டத்துக்கும் முறையாக அழைப்பு அனுப்பினோம். ஒரு கட்சியினர் மட்டும், ‘அழைப்பு இல்லை’ என, புறக்கணித்துள்ளனர்.

வன்னியர் சமுதாயத்துக்கு செய்த சாதனை குறித்து திருமாவளவன் கூறினார். இதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மறுக்க முடியாது. பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு நான் பெற்று தந்த போது, அவர்கள் போட்ட மாலையின் மணம் கூட மாற வில்லை.இப்போது அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை.

பணம் கொடுக்கத் தான் கருணாநிதி பென்னாகரம் வருகிறார்’ என, கிண்டல் செய்கிறார். தேர்தலில் பணத்தை செலவு செய்யாமல் வெற்றி பெற முடியாது.பா.ம.க., பிச்சை எடுத்து தான் தேர்தலில் நிற்கிறதா? தேர்தலில் நியாயமான செலவுகள் உண்டு; அதை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. எல்லா கட்சிகளுக்குமே தேர்தல் நடவடிக்கை தெரியும். உங்களிடம் காசு இருக்கிறதா, இல்லையா என நான் கேட்கமாட்டேன்.

தேர்தலில் தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ம.க., மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இன்னொரு கட்சியை பற்றி சொல்ல மாட்டேன்.யாருக்கு செல்வாக்கு அதிகம் என கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதில், வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும்.

கருத்துக் கணிப்பில் தி.மு.க., முதலிடம், பா.ம.க., இரண்டாமிடம், அ.தி.மு.க., மூன்றாமிடத்தில் தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த கட்சி, மூன்றாமிடத்துக்கு தள்ளப்படுவதில் நான் வேதனை அடைகிறேன்.எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக் காட்டவும், தட்டி கேட்கவும் வேண்டும். மக்கள் பிரச்னையில் அக்கறை காட்டுவதில்லை.

சட்டசபை திறப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் வந்து பார்த்து விட்டு, ‘நன்றாக இருக்கு என’ கூறினர். பா.ம.க.,வினர் கூட எனக்கு கை குலுக்கி சென்றனர்.சட்டசபை அலங்காரமான, அழகான, அறிவு சார்ந்த கட்டடம். அ.தி.மு.க.,வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர். இது திருமண வீட்டில் ஒப்பாரி வைக்கும் கதையாக உள்ளது.

அ.தி.மு.க.,வை தேர்வு செய்து அனுப்பினால், அவரும் கறுப்புச் சட்டை அணிந்து அவர்களுடன் சேர்ந்து நிற்பார். உங்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார். தொகுதிக்கு நல்லது செய்ய பெரியண்ணன் மகனுக்கு வாய்ப்பு அளியுங்கள்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *