சென்னை:கல்விக் கடன் வழங்க மறுத்த வங்கி, 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகை செலுத்த வேண்டும் என, சென்னை ஐகோர்ட் விதித்துள்ளது.கோவையில் உள்ள ஒரு கல்லூரியில், தினேஷ் என்பவர் ஏரோனாடிக்கல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
கல்வி கடனாக, ஆறு லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாய் கேட்டு, சேலம் மாவட்டம் மல்லிக்கரையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை வங்கி நிராகரித்துவிட்டது.
வங்கியில் விசாரித்தபோது, ஏரோனாடிக்கல் படிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கல்விக் கடன் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் மனு தாக்கல் செய்தார். மனுவில் கூறியிருப்பதாவது:ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டு தோறும் ஒப்புதல் புதுப்பிக்கப்படுகிறது. எங்கள் கல்லூரியில் 10 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். என் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்றுள்ளனர். எனவே, இந்த படிப்பிற்கு கடன் உதவி தர முடியாது என்பது பாரபட்சமானது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பு, கல்விக் கடன் திட்டத்தின் கீழ் வரவில்�ல். எனவே, கல்விப் கடன் பெற உரிமையில்லை’ என கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதி பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு.ஏரோநாட்டிக்கல் படிக்கும் மாணவர்கள் இருவருக்கு, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு கல்விக் கடன் வழங்காதது பாரபட்சமானது. கடன் திட்டத்தில் மாறுதல் வந்தது குறித்து வங்கி மேலாளருக்கு தெரியவில்லை எனில், தலைமை அலுவலகத்தில் வழிமுறைகளை பெற்றிருக்கலாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி என்பதால், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள திட்டத்திற்கு அது கட்டுப்பட்டது. எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை இரண்டு வாரங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும். அவருக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடன் பெற, இந்த ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மனுதாரர் தள்ளப்பட்டதால், மல்லிக்கரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளை, 5,000 ரூபாய் வழக்கு செலவுத் தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.
Leave a Reply