சென்னை: ‘மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு கூட விண்ணப்பங்கள் வரவில்லை’ என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், உதவித்தொகை பெறுவதற்கான, ‘கட்-ஆப்’ மதிப்பெண்களை தளர்த்தி, மீண்டும் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்லூரிகளில் 2009-10ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களிடம் இருந்து, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏற்கனவே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள உதவித்தொகைகளின் எண்ணிக்கைக்கு (4,883) ஏற்ப விண்ணப்பங்கள் வரவில்லை.
அதனால், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச, ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டு, குறைந்தபட்சம் 80 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களும் படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை, தேர்வுத்துறை இணையதளம் ( www.tn.gov.in/dge ) மூலம், ‘டவுண்லோடு’ செய்து கொள்ளலாம்.
வரும் 15ம் தேதி விண்ணப்பங்களை படியிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மார்ச் 19ம் தேதிக்குள், ‘இணை இயக்குனர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே, விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப தேவையில்லை. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Leave a Reply