கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்க தேசிய கல்வி நிதி கழகம் துவக்க திட்டம்

posted in: கல்வி | 0

tblarasiyalnews_22850763798புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது: உயர் கல்வி நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு பல இடையூறுகள் உள்ளன.
குறிப்பாக, இந்த வசதிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி கிடைப்பதில் பெரும் பிரச்னைகள் உள்ளன. கல்வி நிறுவனங்கள் தரமான சேவை செய்வதற்கு, அங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியது அவசியம். எனவே, கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கடன்களை வழங்குவதற்கு, ஒரு அமைப்பு தேவை. இதற்காக, தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திட்டக் கமிஷனுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிதி கழகம் அமைக்கப்பட்டு விட்டால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் எளிதில் கடன் பெறலாம்.
அதே நேரத்தில், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான விவகாரங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழு ஆகியவை மட்டுமே தொடர்ந்து ஈடுபடும். இதில், தேசிய கல்வி நிதி கழகத்துக்கு எந்த பணியும் இல்லை. இந்தியாவில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பது, அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றை முறைப்படுத்த தேசிய அங்கீகார ஆணையம் ஏற்படுத்தப்படும். இது தொடர்பான மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். இந்தியாவில் 69 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் அதிகார வரம்பிற்கு வெளியில் செயல்படுகின்றன. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *