ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வார்ன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2வது வெற்றியை ருசித்தது.
மூன்றாவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில், தொடரின் 6வது லீக் போட்டி நடந்தது. இதில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, வார்னை கேப்டனாக கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது.
முதல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்திய டில்லி அணி, இரண்டாவது வெற்றியை நோக்கி களமிறங்கியது. மும்பை அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால், இப்போட்டியில் முதல் வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் ராஜஸ்தான் அணி களம் புகுந்தது. “டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் காம்பிர், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
யூசுப் “டக்’:
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு, அஸ்னோத்கர் (5) மோசமான துவக்கம் அளித்தார். பின்னர் 14 பந்தில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்த நமன் ஓஜா, நிலைக்கவில்லை. மும்பை அணிக்கு எதிராக அதிவேக சதம் கடந்து அசத்திய யூசுப் பதான், இம்முறை டக்-அவுட்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் (18) வெளியேற, ராஜஸ்தான் அணி 8 ஓவரில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
ஜுன்ஜுன்வாலா ஆறுதல்:
பின்னர் இணைந்த டோக்ரா, ஜுன்ஜுன்வாலா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தபோது, டோக்ரா (29) “ரன்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த மஸ்காரனாஸ் (3) ஏமாற்றினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜுன்ஜுன்வாலா (53*) ஆறுதல் அளித்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது.
சேவக் அதிரடி:
சுலப இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் கொடுத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்து பவுண்டரி, சிக்சர் என விளாசிய இவர், உனியால் வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, ஐ.பி.எல்., அரங்கில் தனது 5வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு காம்பிர் (9), தில்ஷன் (0) ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய சேவக், 34 பந்தில் 75 ரன்கள் (5 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.
இரண்டாவது வெற்றி:
பின்னர் வந்த டிவிலியர்ஸ் (15), தினேஷ் கார்த்திக் (16*), மன்ஹாஸ் (10) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். டில்லி அணி 17 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சேவக் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இரண்டு போட்டியில் வெற்றி கண்ட டில்லி அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கங்குலியின் கோல்கட்டா அணி (4 புள்ளி) உள்ளது.
ஸ்கோர் போர்டு
ராஜஸ்தான் ராயல்ஸ்
அஸ்னோத்கர் (கே)தில்ஷன் (ப)நான்ஸ் 5(4)
ஸ்மித் (கே)சேவக் (ப)சங்வான் 18(17)
நமன் ஓஜா (ப)மிஸ்ரா 24(14)
யூசுப் பதான் (கே)டிவிலியர்ஸ் (ப)மகரூப் 0(5)
ஜுன்ஜுன்வாலா –அவுட் இல்லை- 53(45)
டோக்ரா -ரன் அவுட்-(காம்பிர்/மிஸ்ரா) 29(26)
மஸ்காரனாஸ் -ரன் அவுட்-(மிஸ்ரா/கார்த்திக்) 3(3)
உனியல் -அவுட் இல்லை- 4(6)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,) 141
விக்கெட் வீழ்ச்சி: 1-14(அஸ்னோத்கர்), 2-45(நமன் ஓஜா), 3-46(யூசுப் பதான்), 4-50(ஸ்மித்), 5-110(டோக்ரா), 6-115(மஸ்காரனாஸ்).
பந்துவீச்சு: மகரூப் 4-0-32-1, நான்ஸ் 4-0-27-1, மிஸ்ரா 4-0-34-1, சங்வான் 4-0-20-1, லட்டா 4-0-28-0.
டில்லி டேர்டெவில்ஸ்
காம்பிர் (கே)ஸ்மித் (ப)மஸ்காரனாஸ் 9(8)
சேவக் (கே)ஸ்மித் (ப)முனாப் 75(34)
தில்ஷன் (கே)நமன் ஓஜா (ப)மஸ்காரனாஸ் 0(1)
டிவிலியர்ஸ் (கே)பசால் (ப)வார்ன் 15(24)
கார்த்திக் -அவுட் இல்லை- 23(26)
மன்ஹாஸ் -அவுட் இல்லை- 11(10)
உதிரிகள் 9
மொத்தம் (17.1 ஓவரில், 4 விக்.,) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-42(காம்பிர்), 2-42(தில்ஷன்), 3-99(சேவக்), 4-114(டிவிலியர்ஸ்).
பந்துவீச்சு: மஸ்காரனாஸ் 4-0-31-2, டெய்ட் 4-0-27-0, முனாப் 3-0-32-1, உனியால் 2-0-25-0, வார்ன் 4-0-22-1, ஜுன்ஜுன்வாலா 0.1-0-2-0.
புள்ளி பட்டியல்:
பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய, டில்லி டேர்டெவில்ஸ் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்-ரேட்
டில்லி 2 2 0 4 +0.709
கோல்கட்டா 2 2 0 4 +0.426
டெக்கான் 2 1 1 2 +0.500
மும்பை 1 1 0 2 +0.200
பஞ்சாப் 1 0 1 0 -0.261
பெங்களூரு 1 0 1 0 -0.800
சென்னை 1 0 1 0 -1.550
Leave a Reply