திருவனந்தபுரம் : பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ‘கிங் பிஷர்’ விமானத்தில், கிரிக்கெட் பந்து அளவில் வெடிகுண்டு இருந்ததால், அது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
‘கிங் பிஷர்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, நேற்று பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்றது. அந்த விமானத்தில் பயணிகள் 27 பேர், பணியாட்கள் நான்கு பேர் என மொத்தம் 31 பேர் பயணித்தனர். பெங்களூரில் காலை 6.25 மணிக்கு புறப்பட்ட விமானம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் 8 மணிக்கு தரை இறங்கியது. உடன், பயணிகள் இறங்கிச் சென்றனர்.பின்னர், விமானத்தில் சரக்குகள் வைக்கும் பிரிவை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, பெங்களூரு பதிப்பில் வெளியான மலையாள பத்திரிகை ஒன்றில், கிரிக்கெட் பந்து போன்ற பொருள் சுற்றப்பட்டிருப்பதை கண்டனர்; அது வெடிகுண்டாக இருக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர்.உடனே போலீசாருக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்தவுடன், விமானம் தனியான ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அந்தப் பொருள் பரிசோதிக்கப்பட்டது. அது, நாட்டு வெடிகுண்டு என கண்டறியப்பட்டது. வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், அதை தண்ணீரில் போட்டு செயலிழக்கச் செய்தனர்.
மர்மம்: அதே நேரத்தில், அது வெடி மருந்து என்றும், அதில், எந்த விதமான ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என்பது தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என, மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.விமானத்திற்குள் வெடிகுண்டு எப்படி வந்தது என்பது மர்மமாக உள்ளது. ‘இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு’ என, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் சிறப்பு செயலர் பன்சால் கூறியுள்ளார். இந்த வெடிகுண்டானது பெங்களூரில் லக்கேஜ்களை ஏற்றும்போதோ அல்லது திருவனந்தபுரத்தில் இறக்கும்போதோ வைக்கப்பட்டிருக்கலாம். வெடிகுண்டுடன் டெட்டனேட்டரோ அல்லது டைமரோ இணைக்கப்படவில்லை. இல்லையெனில் அது வெடித்திருக்கும்.விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமான நிலைய ஊழியர்களிடம் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், விமானத்தில் மீண்டும் ஒரு முறை முழுமையாக சோதனை நடத்தப்பட்டது. அதில், ஆட்சேபகரமான வேறு பொருட்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, ‘கிங் பிஷர்’ விமான நிறுவன தகவல் தொடர்பாளர் கூறுகையில், ”பயணிகள் இறங்கியவுடன், விமானத்தில் வழக்கமான பரிசோதனை மேற்கொண்ட போது, கேட்பாரற்ற நிலையில் ஒரு பொருள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்தப் பொருளை அப்புறப்படுத்தினர். விமானப் பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை,” என்றார்.”இது மிகவும் அபாயகரமான விஷயம். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்,” என கேரள சட்ட அமைச்சர் விஜய்குமார் கூறினார்.
Leave a Reply