சென்னை:கூவம் நதியை சீரமைக்க, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன், முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.
சென்னை கூவம் ஆற்றை சீரமைப்பது குறித்து ஆராய, கடந்த ஆண்டு, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிங்கப்பூர் சென்ற குழு, அங்குள்ள சிங்கப்பூர் மற்றும் கல்லாங் ஆறுகளை, அந்நாட்டு அரசு எப்படி சீரமைத் தது என்பதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது.இதன்படி, ‘சென்னை நதிகள் ஆணையம்’ அமைக்கப்பட்டு, முதற்கட்டமாக, கூவம், சென்னையின் பிற நீர் நிலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தலைமை செயலர் தலைமையில், ‘நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளை நேற்று கூவம் நதியை சீரமைக்க ஒப்பந்தம் செய்தது.முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் துறை செயலர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அப்போன்சஸ் சியா, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, பணீந்திர ரெட்டி, நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் நிறுவனம் தனது சக நிறுவனங்களுடன் சேர்ந்து, கூவத்தை சீரமைக்க, ‘பெருந்திட்டம்’ ஒன்றை தயாரிக்க, சென்னை நதிநீர் அறக் கட்டளைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கும். இந்த பெருந்திட்டத்தின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் துவங்கும். அதற்கும் தொழில்நுட்ப உதவிகளை சிங்கப்பூர் நிறுவனம் செய்யும்.இந்த ஒப்பந்தம், முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளது. பின், முதல்வரின் ஒப்புதல் பேரில் அது நீட்டிக்கப்படலாம். சிங்கப்பூர் நிறுவன அதிகாரிகள், நேற்று முன்தினம், சென்னை மெட்ரோ கழிவுநீர் அகற்றுதல் வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசினர்.குடிசை மாற்று வாரியம், மாசுக் கட்டுப்பாடு வாரியம், சி.எம்.டி.ஏ., ஆகியவற்றின் அதிகாரிகளுடன் பேச உள்ளனர்.
அதேபோல, புதிய தலைமைச் செயலகத்துக்கு பசுமை கட்டட சான்றிதழ் கிடைத்துள்ளதால், அதையும் பார்வையிட உள்ளனர். கூவத்தின் ஓரமுள்ள பல்வேறு பகுதிகளையும் பார்வையிட உள்ளனர்.இதன்பின், முதல் கட்ட அறிக்கையை தயாரித்து, என்னென்ன தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது என முடிவு செய்வர். இந்த திட்டத்தை பல்வேறு துறைகள் மூலம் செயல் படுத்த உள்ளதால், எவ்வளவு செலவாகும் என மதிப்பிட முடியாது. எனினும், சென்னை குடிநீர் வாரியம் மட்டும் 468 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். இது சென்னைக்கு மட்டும் தான். புறநகரில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் செய்யும் பணிகளையும் சேர்த்தால் கூடுதல் செலவாகும்.கூவம் ஓரத்தில் உள்ளவர்களை மறுகுடியமர்வு வசதிகள் செய்வதற்கான அறிக்கை, வரும் மே மாதத்துக்குள் தயாராகிவிடும்.
சிங்கப்பூரில் சீரமைக்கப்பட்ட நதியின் நீளம் 12 கி.மீ., தான். அதை சுத்தப்படுத்த 10 ஆண்டுகள் ஆனது. ஆனால், கூவம் நதி 65 கி.மீ., நீளம் கொண்டது. அத்துடன், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், பக்கிங்காம், கேப்டன் காட்டன் கால்வாய் போன்றவற்றின் கழிவுகளும் கூவத்தில் சேருகின்றன. இவற்றை அகற்றி, வேலைகளை முடிப்பது கடினமானது.பல துறைகள் சேர்ந்து செய்யப் பட்ட பணி, தற்போது சரியான வழியில் துவக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தலைமையிலான குழு, இதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.இவ்வாறு பணீந்திர ரெட்டி கூறினார்.
Leave a Reply