தர்மபுரி :பென்னாகரம் தொகுதி தேர்தலில் பெண்களை கவர முடிவு செய்துள்ள பா.ம.க., ‘கோல்டு காயின்’ வழங்கிட ஆலோசனை செய்து வருகிறது.
பென்னாகரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர, முக்கிய கட்சி, வேட்டி, சேலை, பேன்ட், சர்ட், 1,000 ரூபாய் பணம் என முதல் கட்டமாக பட்டுவாடா செய்திருப்பதாக பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில், இலவச பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடியுள்ளது.எந்தக் கட்சி பிரசாரத்துக்கு சென்றாலும், வாக்காளர்கள் நேரடியாக, ‘நீங்கள் என்ன தருவீர்கள்?’ என கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பிற அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பா.ம.க., ஆரம்பத்தில் இருந்து வன்னிய மக்களின் ஓட்டுக்களை பெறுவதில் அதிக அக்கறை எடுத்து கொண்டாலும், 10 நாட்களில் ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகள் பா.ம.க.,வுக்கு எதிராக திரும்பியுள்ளதால், பா.ம.க.,வும் வாக்காளர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.ஆரம்பத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மொபைல் போன் வழங்க பா.ம.க.,வில் முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால், மொபைல் போன்களை தொகுதிக்குள் எடுத்து சென்று பட்டுவாடா செய்வதில் பல்வேறு சிரமங்களும், செக்-போஸ்ட்களை தாண்டி சென்று வழங்குவதில் கட்சியினர் மத்தியில் தயக்கம் ஏற்பட்டது.
இந்த தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதில் பா.ம.க., குறியாக இருப்பதோடு, வன்னிய சமூக பெண்களின் ஓட்டுக்களை சிதறாமல் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பணம் கொடுத்தால், குடும்ப தலைவர்கள் குடித்து விட்டு, ஊதாரியாக செலவு செய்வதால், அது குடும்ப தேவையை பூர்த்தி செய்யாது என்பதால், குடும்பத்தில் உள்ள பெண்களை கவர வேண்டும் என்ற முடிவில் பா.ம.க., உள்ளது. சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில் பெங்களூரில் கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், வன்னிய சமூக பெண்களை கவரும் வகையில் ‘கோல்டு காயின்’ (ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம்) ஒரு லட்சம் பேருக்கு வழங்குவது என்ற முடிவு செய்திருப்பதோடு, அதற்கான செலவுகளை அன்புமணி கொடுப்பதாக கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Leave a Reply