ஐதராபாத் : “வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் பொறுப்பற்ற அறிக்கைக்கு பிரதமர் மன்மோகன்சிங் முடிவு கட்ட வேண்டும்’ என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங்குடன் சவுதி அரேபிய பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சசிதரூர், “”இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு மதிப்புமிக்க மத்தியஸ்தராக சவுதி அரேபியா செயல்படலாம்’ என, கூறியிருந்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் பேச்சில் மூன்றாவது நாடு தேவையில்லை என்பது தொடர்ந்து பின்பற்றப்படும் கொள்கையாகும். வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் பேச்சு பெரிய அளவில் விவாதத்தை எழுப்பியது.
பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் இதுதொடர்பாக கூறியதாவது: மத்திய இணை அமைச்சர் சசி தரூர், எப்போதும் பொறுப்பற்ற அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அவர் சாதாரண மனிதர் அல்ல, ஒரு அமைச்சர் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சசி தரூர் இப்படி பொறுப்பற்ற அறிக்கைகள் வெளியிடுவதை பிரதமர் மன்மோகன்சிங் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
சசி தரூரின் அறிக்கையை நாடு ஏற்றுக் கொள்ளாது. இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடே கூடாது என்பதுதான் நமது கொள்கை. அப்படிப்பட்ட நிலையில், பொறுப்பற்ற வகையில் அறிக்கை வெளியிட்ட சசி தரூர் மீது பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாவேத்கர் கூறினார். மேலும் அவர் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதாவைக் கொண்டு வர வலியுறுத்தி பா.ஜ., குரல் எழுப்பும் என்றும் கூறினார்.
Leave a Reply