சமச்சீர் கல்வி:​ 2 முதல் 10 வகுப்பு வரை புத்தகங்கள் எழுத பாட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ மார்ச் 23:​ சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநரின் உத்தரவுப்படி,​​ பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணை:

மார்ச் 1}ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சமச்சீர் கல்வித் திட்டத்தில் புதிய பாடநூல்கள் எழுதும் பணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

ஒரு வகுப்புக்கு ஒரு இணை இயக்குநர் என்று நியமனம் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொரு குறிப்பிட்ட பாடத்துக்கும் ​(அனைத்து வகுப்புகளுக்கும்)​ இணை இயக்குநர்களை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாட வாரியாக இணை இயக்குநர்கள் நியமனம்:​​ அதன்படி தமிழ் பாடத்துக்கு ராம.பாண்டுரங்கன்,​​ எஸ்.ரஞ்சனிதேவி ஆகிய இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.​ ஆங்கிலப் பாடத்துக்கு வி.சி.ராமேஸ்வர முருகன்,​​ ப.செல்வகுமாரி;​ ​ கணிதம் பாடத்துக்கு வீ.ராஜராஜேஸ்வரி,​​ சி.உஷாராணி;​ அறிவியல் பாடத்துக்கு எஸ்.கார்மேகம்,​​ முத்து.​ பழனிச்சாமி;​ சமூக அறிவியல் பாடத்துக்கு ஆர்.பிச்சை,​​ எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணை இயக்குநர் லதா,​​ ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் தயாரிப்பு பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.

ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி ஆசிரியர் குழுக்களை நியமனம் செய்து ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தகம் எழுதும் பணியை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தலாம்.

பாடங்களை எழுதும் ஆசிரியர்களை தவிர ஆய்வாளர்கள் மற்றும் பாடக்குழு உறுப்பினர்கள் பட்டியலை இறுதி செய்து கொள்ள வேண்டும்.​ ஆசிரியர்கள் பாடப் புத்தகங்கள் எழுதும்போது ஆய்வாளர்கள் மற்றும் தலைவர்,​​ பாடங்களை கூர்ந்து ஆய்வு செய்து உரிய திருத்தங்களை அவ்வப்போது மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பாடப் புத்தக மேற்பார்வை பொறுப்பு வகிக்கும் இணை இயக்குநர்கள் தங்களுக்குத் தேவையான நிதியை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரிடம் பெற்றுக் கொண்டு தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.

இத்துடன் பள்ளிக் கல்வி இயக்குநர் }​ அறிவியல் பாடத்தையும்,​​ மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் }​ தமிழ் மற்றும் கணிதம் பாடத்தையும்,​​ தொடக்கக் கல்வி இயக்குநர் }​ ஆங்கிலம்,​​ சமூக அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கான பாடப் புத்தகம் எழுதும் பணியை மேற்பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *