சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி

posted in: மற்றவை | 0

cmசென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது.

சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்ற படங்கள், நாடகங்கள் மூலம் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியது.

எனினும், இதையெல்லாம் இன்னும் புரிந்து கொள்ளாத, புரிந்து கொண்டாலும், திருந்திக் கொள்ள இயலாதோர் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு, அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படும் கயமைத்தனமான சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

ஊடகங்களின் பொறுப்புணர்வு: குற்றங்கள் எப்படி, எங்கே, யாரால் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட, பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். இதை, எதிர்காலத் தலைமுறை மீது அக்கறை கொண்ட அனைவரும் எண்ணிப் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் அறிந்தோர், அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டும். மாறாக, தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது. இது தீயவர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாக ஆகிவிடும்.

“அருவருக்கத் தக்க செய்திகள் மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம்தானே” என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம்.

போதையேற்றும் கள் அருந்தியவனை, மேலும் கள்ளை ஊற்றி திருத்த முடியுமா? அதுபோலவே, இந்தச் செய்திகளும், படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்து விடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *