புதுடில்லி: ‘இந்தியாவில் உள்ள 13 பெருநகரங்களில், வரும் 1ம் தேதி முதல், யூரோ-4 வாகன நியதிப்படி சுத்தமான எரிபொருள் விற்பனை செய்ய உள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசும் அதிகரிக்கும்’ என, பெட்ரோலியத் துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.
பெட்ரோலியத் துறை செயலர் எஸ்.சுந்தரேசன் கூறியதாவது: சுத்தமான வாகன எரிபொருளான, யூரோ-4 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை, வரும் 1ம் தேதி முதல், டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் உட்பட 13 பெருநகரங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. மற்ற நகரங்களில் யூரோ-3 எரிபொருளே விற்பனை செய்யப்படும். யூரோ-4 எரிபொருளில், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அதில் உள்ள சல்பர் அளவு குறைக்கப்பட்டிருக்கும். யூரோ-4 தரத்திலான சுத்தமான வாகன எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. யூரோ-3 எரிபொருள் விலையை விட, யூரோ-4 எரிபொருள் விலை சர்வதேச அளவில் அதிகம். எனவே, சுத்தமான எரிபொருளுக்கான விலை உயர்த்தப்படும். இந்த வித்தியாசத்தை நுகர்வோர் ஏற்க வேண்டும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியத்திற்கு இந்த நிதியாண்டில், 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், மானிய விலையில் எரிபொருள் தரப்படுகிறது. எரிபொருட்களின் விலையை உயர்த்தவில்லை என்றால், அடுத்த நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு, 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். யூரோ-4 எரிபொருள் கட்டணத்தை தவிர, பெட்ரோல் விலையில் ஆறு ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 4.06 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையில் லிட்டருக்கு 16.91 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு 267.39 ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க தீவிரமான முடிவுகள் தேவை. இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
Leave a Reply