மதுரை : “நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்து காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும்,’ என்று மதுரையில் நடந்த கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் “நியூட்ரினோ ஆய்வுக் கூடம்’ குறித்த கலந்துரையாடல் நேற்று நடந்தது. இயற்பியல் துறை தலைவர் என். மாணிக்கம் வரவேற்றார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இயற்பியல், வேதியியல், உரியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கிற்கு தலைமை வகித்த நியூட்ரினோ ஆய்வுக்கூட செல் தலைவர் டி.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் பேசுகையில், “”இதுவரை தரமான ஆய்வுக் கூடங்கள் இங்கு வராததால், இழந்த அந்த வாய்ப்பை நாம் பெற இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பான முன்னோட்ட ஆய்வை மதுரை அமெரிக்கன் கல்லூரி நடத்த உள்ளது. இதில் பல்கலை, கல்லூரிகள் இணைந்து செயல்பட்டால் வரவேற்போம்,” என்றார்.
சென்னை மேதமடிக்கல் சயின்டிபிக் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ஜி.ராஜசேகரன் பேசியதாவது: உலகில் ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் இந்த ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. 1965ம் ஆண்டில் விஞ்ஞானி பாபா தலைமையில் நியூட்ரினோ ஆய்வு துவங்கி, பல உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டன. கோலார் தங்கச் சுரங்கம் செயல்பாட்டில் இருந்தபோது, இந்த ஆய்வு அங்கு நடந்தது. அன்றைய கண்டுபிடிப்பு மற்ற பகுதிகளின் ஆய்வுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. அதனடிப்படையில் நடந்த ஆய்வால் பிறநாட்டவர்கள் நோபல் பரிசு பெற்றனர். கோலார் சுரங்க ஆய்வு தொடர்ந்து நடந்திருந்தால், நமக்கும் நோபல் பரிசு கிடைத்து இருக்கலாம். இப்போது பரிசு இல்லையென்றாலும், பரிசு பெற்றோருக்கு இந்த ஆய்வு முடிவுகளே உறுதுணையாக இருந்துள்ளன. தமிழகத்தில் இந்த ஆய்வுக் கூடம் வரும்போது, அடிப்படை ஆய்வுகளின் தரத்தை இது மேம்படுத்தும். ஐ.எஸ்.ஆர்.ஓ., பாபா அணு ஆராய்ச்சி கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆய்வு நிறுவனங்களைப் போன்ற உலகத்தரமான ஆய்வுக் கூடம் மதுரையிலோ, தேனியிலோ அமைக்கப்படலாம். இது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி கழக விஞ்ஞானி விவேக்தத்தார் கூறியதாவது: இந்த “நியூட்ரினோ’ துகள்களை, அணுவில் உள்ள நியூட்ரானுடன் சேர்த்து குழப்பக் கூடாது. நியூட்ரானில் கதிர்வீச்சு உள்ளது. ஆனால் நியூட்ரினோ இயற்கையில் உள்ளது. இந்த பூமியும், கோள்களும் நியூட்ரினோ சமுத்திரத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் அத்துகள்கள் பிரபஞ்சத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும், நூறு கோடி நியூட்ரினோ துகள்கள் அலை அலையாக நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஒளி கூட ஊடுருவாத பொருளை இது கடந்து செல்லும். இது சூரியனில் இருந்தும், நட்சத்திரம், பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் உருவாகலாம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இது நம்மை கடந்து செல்கிறது. இதனால் ஆபத்து கிடையாது. இது நேரடியாக பயன்தரும் ஆய்வு கிடையாது. ஆனால் அதிக பயன் கிடைக்கும் ஆய்வுகள் நடக்க, இது அடிப்படையான ஆய்வாக அமையும். இன்று பிரபஞ்சத்தை “பிக் பேங்க்’ எனும் “அண்ட வெடிப்பு’ அடிப்படையில் ஆய்வு செய்கிறோம். அதற்கு முன், என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால் நியூட்ரினோ ஆய்வு, இதனை தெளிவாக கூற வாய்ப்புள்ளது. பூமியில் உள்ள கனிம வளம் மற்றும் பூகம்பம், எரிமலை போன்ற அகநிலை நிகழ்வுகளையும் நாம் நேரடியாக படிக்க முடியவில்லை. ஆனால் நியூட்ரினோ ஆய்வு வலுப்பெறும்போது, பூமியின் அகநிகழ்வுகளை படம் பிடித்தும் காட்ட வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை முன்னதாக அறிய முடியும் என்றார்.
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் மைய பேராசிரியர் பி.எஸ்.ஆச்சார்யா பேசுகையில், “”இந்த ஆய்வுக் கூடம் இயற்பியல், பொறியியல் மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு அளிக்கும். வரும் காலங்களில் இவை சார்ந்த கம்ப்யூட்டர், வேதியியல் போன்ற பிற துறைகள் வளம்பெறும். இந்த ஆய்வுக் கூடம் பற்றிய தவறான கருத்தை பரப்புவோரிடம் நாம், விஞ்ஞான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்,” என்றார்.
Leave a Reply